பிரபல கன்னட நடிகர் துனியா விஜய் கைது

பெங்களூருவில், உடற்பயிற்சியாளரை காரில் கடத்தி தாக்கிய வழக்கில் பிரபல கன்னட நடிகர் துனியா விஜய் கைது செய்யப்பட்டார்.
பிரபல கன்னட நடிகர் துனியா விஜய் கைது
Published on

பெங்களூரு,

போலீசார் முன்பும் துனியா விஜய் தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு உண்டானது.

கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்து வருபவர் துனியா விஜய் என்ற விஜய். இவர், மாஸ்திகுடி, துனியா, சங்கர் ஐ.பி.எஸ் உள்பட 35-க்கும் மேற்பட்ட கன்னட படங்களில் நடித்துள்ளார். 2007-ம் ஆண்டு வெளியான துனியா திரைப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து நடிகர் விஜய், துனியா விஜய் என்று அனைவராலும் அழைக்கப்படுகிறார். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு(2017) வெளியான மாஸ்திகுடி படத்தின் படப்பிடிப்பு பெங்களூரு அருகே தாவரகெரேயில் நடைபெற்ற போது, ஹெலிகாப்டரில் இருந்து ஏரியில் குதித்த 2 வில்லன் நடிகர்கள் நீரில் மூழ்கி பலியானார்கள்.

இந்த நிலையில், பெங்களூரு வசந்த்நகரில் உள்ள அம்பேத்கர் பவனில் நேற்று முன்தினம் இரவு பெங்களூரு ஆணழகன் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை காண நடிகர் துனியா விஜய் தனது நண்பர்களுடன் சென்றிருந்தார். அதே நேரத்தில் உடற்பயிற்சியாளரான மாருதிகவுடாவும் சென்றிருந்தார். மாருதிகவுடா, பிரபல உடற்பயிற்சியாளரான பானிபூரி கிட்டியின் சகோதரர் மகன் ஆவார். பானிபூரி கிட்டியிடம் தான் முதலில் சினிமா படங்களில் நடிக்க நடிகர் துனியா விஜய் உடற்பயிற்சி மேற்கொண்டு வந்தார். பின்னர் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக 2 பேரும் பிரிந்து விட்டனர்.

ஆணழகன் போட்டி நடைபெற்ற பகுதிக்கு வந்திருந்த மாருதிகவுடாவிடம் பானிபூரி கிட்டி பற்றி துனியா விஜய் கேட்டதாக தெரிகிறது. அந்த சந்தர்ப்பத்தில் மாருதிகவுடாவுக்கும், துனியா விஜயின் நண்பர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் உண்டானது. வாக்குவாதம் முற்றவே மாருதிகவுடாவை துனியா விஜயின் நண்பர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் துனியா விஜய் தனது நண்பர்களுடன் சேர்ந்து மாருதிகவுடாவை தனது காரில் வசந்த்நகரில் இருந்து கடத்தி சென்று விட்டதாக தெரிகிறது. இதுபற்றி பானிபூரி கிட்டிக்கு மாருதிகவுடாவின் நண்பர்கள் தகவல் கொடுத்தார்கள்.

உடனே அவர் வசந்த்நகருக்கு விரைந்து வந்தார். பின்னர் தனது சகோதரர் மகனை நடிகர் துனியா விஜய், அவரது நண்பர்கள் கடத்தி சென்று விட்டதாக கூறி ஐகிரவுண்டு போலீஸ் நிலையத்தில் பானிபூரி கிட்டி தெரிவித்தார். இதையடுத்து, மாருதிகவுடாவை மீட்க போலீசார் நடவடிக்கை எடுத்தார்கள். மேலும் துனியா விஜயை ஐகிரவுண்டு போலீசார் தொடர்பு கொண்டு போலீஸ் நிலையத்திற்கு வரும்படியும், மாருதிகவுடாவை விடுவிக்கும்படியும் எச்சரித்தனர். இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் மாருதிகவுடாவுடன் ஐகிரவுண்டு போலீஸ் நிலையத்திற்கு துனியா விஜய் தனது நண்பர்கள் மணி, பிரசாத்துடன் வந்தார்.

அப்போது ஐகிரவுண்டு போலீசாரிடம் தன்னை துனியா விஜய் காரில் கடத்தி சென்று தாக்கியதாக மாருதிகவுடா கூறினார். இதை கேட்டு பானிபூரி கிட்டி ஆத்திரமடைந்தார். மேலும் தனது சகோதரர் மகனை கடத்தி தாக்கியது குறித்து துனியா விஜயிடம் பானிபூரி கிட்டி கேட்டார். அப்போது போலீசார் முன்பாகவே பானிபூரி கிட்டியுடன் துனியா விஜய் தகராறில் ஈடுபட்டதுடன், அவரை தகாத வார்த்தையில் திட்டியதாக கூறப்படுகிறது.

உடனே பானிபூரி கிட்டியின் ஆதரவாளர்கள் போலீஸ் நிலையம் முன்பாக நிறுத்தப்பட்டு இருந்த துனியா விஜயின் கார் கண்ணாடியை உடைத்து நொறுக்கினார்கள். இதனால் ஐகிரவுண்டு போலீஸ் நிலையம் முன்பாக பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, கர்நாடக ஆயுதப்படை போலீசார் வரவழைக்கப்பட்டு அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள்.

இந்த பிரச்சினைகளுக்கு இடையே பானிபூரி கிட்டி கொடுத்த புகாரின் பேரில் மாருதிகவுடா காரில் கடத்தி தாக்குதல் நடத்தியதாக நடிகர் துனியா விஜய், அவரது நண்பர்கள் மணி, பிரசாத் மீது ஐகிரவுண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்தார்கள். மேலும் அவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டார்கள். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் படுகாயம் அடைந்த மாருதிகவுடா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதற்கிடையில், நடிகர் துனியா விஜய் குடிபோதையில் மாருதிகவுடாவுடன் சண்டை போட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து, நேற்று காலையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும் தனது காரை பானிபூரி கிட்டியின் ஆதரவாளர்கள் உடைத்ததாக கூறி ஐகிரவுண்டு போலீஸ் நிலையத்தில் நடிகர் துனியா விஜய் சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. கன்னட நடிகர் துனியா விஜய் கைது செய்யப்பட்ட சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

துனியா விஜய் பெயரை ரவுடி பட்டியலில் சேர்க்க முடிவு?

நடிகர் துனியா விஜய், உடற்பயிற்சியாளர் மாருதிகவுடாவை கடத்தி தாக்கியதாக கைது செய்யப்பட்டது பற்றி தகவல் வெளியானதும், இதற்கு முன்பும் சிலரை துனியா விஜய் தாக்கியதாக குற்றப்பிரிவு போலீசாரின் கவனத்திற்கு வந்தது. இதையடுத்து, குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ், கைதான துனியா விஜயிடம் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினார். மேலும் துனியா விஜய் மீது ஏற்கனவே மாஸ்திகுடி படத்தின் இயக்குனர் சுந்தர்கவுடாவை போலீசார் கைது செய்ய விடாமல் தடுத்ததாக தாவரகெரே போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு இருக்கிறது. ஏற்கனவே இயக்குனர் சுந்தர்கவுடாவின் சகோதரர் மனைவியை தகாத வார்த்தையில் திட்டியதாகவும் துனியா விஜய் மீது போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவாகி உள்ளது. இதுதவிர சில தயாரிப்பாளர்களுடன் துனியா விஜய் சண்டை போட்டதாக குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இதன்காரணமாக நடிகர் துனியா விஜய் பெயரை ரவுடி பட்டியலில் சேர்க்க குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com