

ஈரோடு,
ஈரோடு மாநகரின் மத்தியில் உள்ள ஈரோடு தாலுகா அலுவலகம் எப்போதும் பரபரப்பாக காணப்படுவது வழக்கம். ஈரோடு தாலுகா பகுதி மக்கள் பல்வேறு வருவாய்த்துறை தேவைகளுக்காகவும் இங்கே கூடுவதால் இந்த பரபரப்பு இருக்கும். ஆனால் கடந்த ஒரு வார காலமாக ஈரோடு தாலுகா அலுவலகம் போராட்டங்கள் காரணமாக பரபரப்பு அடைந்து உள்ளது.
வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர், கிராம நிர்வாக அலுவலக உதவியாளர்கள் சங்கத்தினர், அங்கன்வாடி பணியாளர்கள் சங்கத்தினர், சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் என்று அரசுத்துறை பணியாளர்கள் தங்கள் தொடர் போராட்ட களமாக தாலுகா அலுவலக வளாகத்தை மாற்றி உள்ளார்கள். இவர்களுடன் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டத்தையும் இங்கேயே நடத்தி வருகிறார்கள். போராட்ட குழுவினர் அங்கேயே சமைத்து சாப்பிட்டு அங்கேயே தங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
போராட்ட குழுவினரின் நடமாட்டம், கோரிக்கை விளக்க கோஷங்கள், கோரிக்கையை வலியுறுத்தி பேசும் தலைவர்கள், நிர்வாகிகள் என்று தாலுகா அலுவலக வளாகம் பரபரப்பாக இயங்குகிறது. ஆனால் 9 நாட்களாக தாலுகா அலுவலகம், தேர்தல் அலுவலகம், வழங்கல் அலுவலகம் ஆகியவை மூடப்பட்டு இருக்கின்றன.
தங்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக இந்த அலுவலகங்களை தேடி வரும் பொதுமக்கள் தினமும் வந்து அலுவலகங்களின் முன்பு காத்து நின்று ஏமாற்றம் அடைந்து திரும்புகிறார்கள்.
போராட்ட குழுவினர் கேட்கும் கோரிக்கைகளில் நியாயமானவற்றை நிறைவேற்றுவதன் மூலம் போராட்டத்தை களையச்செய்ய அரசினால் முடியும். தற்போது தேர்தல் நெருங்கி வருவதால் அனைத்து துறையினரும் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற தொடர் போராட்டம் நடத்துகிறார்கள். இதற்கு அரசு செவிசாய்க்க வேண்டும். போராட்ட களத்தில் இருந்து அதிகாரிகள், பணியாளர்கள் விரைவில் பணிக்கு திரும்பச்செய்ய வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.