

மதுரை,
குழந்தைகளின் ஆபாச படங்களை இணைய தளங்களில் பதிவேற்றம் செய்வதில் தமிழகம் முதல் இடத்தில் இருப்பதாக மத்திய அரசு சில மாதங்களுக்கு முன்பு அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டது. அதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் போலீசார் இது குறித்து தீவிரமாக கண்காணித்து வந்தனர். சென்னை, திருச்சி, கோவை என அடுத்தடுத்து பல இடங்களில் குழந்தைகளின் ஆபாச படங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தது தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டனர்.
அதன் ஒரு பகுதியாக மதுரையிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வந்தனர். அப்போது தேசிய குழந்தைகள் பாதுகாப்பு மையம் மற்றும் சைபர் கிரைம் போலீசார், மதுரை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் ஒன்றை கொடுத்தனர். அதில் மதுரை ஆரப்பாளையம், சண்முகநாதபுரம் 3-வது தெருவை சேர்ந்த குமார்(வயது 40) என்பவர் அவரது செல்போனில் கடந்த ஓராண்டுக்கு மேலாக சிறுமிகள் தொடர்புடைய ஆபாச படங்களை பார்த்ததும், அதனை பிறருக்கு அனுப்பி வந்ததாகவும் தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது, குமார் லாரி அலுவலகத்தில் வேலை பார்த்து வந்ததும், அவர் குழந்தைகளை ஈடுபடுத்தி எடுக்கப்பட்ட ஆபாச படங்களை பார்த்து வந்ததும் தெரியவந்தது. பின்னர் அவரை போலீசார் பிடித்து அனைத்து தெற்கு மகளிர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் அங்கு நடத்திய விசாரணையில் குமார் செல்போனில் அந்த படங்களை பார்த்து, அதனை நண்பர்களின் இருவரின் முகநூலுக்கு பகிர்ந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து, தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து குமார் மற்றும் அவரது நண்பர் செந்தில்குமார்(31) உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டார்கள்.
மதுரையில் முதல்முறையாக சிறுமிகள் ஆபாச படங்களை முகநூலில் பரப்பியது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.