தஞ்சை மாவட்டத்தில் வேலைநிறுத்த போராட்டத்தால் தபால், வங்கி சேவைகள் பாதிப்பு

தஞ்சை மாவட்டத்தில் வேலை நிறுத்த போராட்டத்தால் தபால், வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டன. பஸ், ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 106 பேர் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சை மாவட்டத்தில் வேலைநிறுத்த போராட்டத்தால் தபால், வங்கி சேவைகள் பாதிப்பு
Published on

தஞ்சாவூர்,


மத்திய அரசின் பொருளாதார கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் நாடு முழுவதும் மத்திய அரசு ஊழியர்கள் 2 நாள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி நேற்று வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

இந்த போராட்டத்தில் மாநில அரசு ஊழியர்களும் பங்கேற்றனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி தஞ்சை மாவட்டத்தில் வழக்கம் போல பஸ்கள் இயங்கின. தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் 8 ஆயிரம் ஆட்டோக்கள் உள்ளன. இதில் 300 ஆட்டோக்கள் ஓடவில்லை.


தஞ்சை மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் 6 சதவீதம் பேர் பணிக்கு வரவில்லை. இன்சூரன்சு துறை ஊழியர்கள் 100 சதவீதம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தபால் துறை ஊழியர்கள் 40 சதவீதம் பேரும், வருமானவரித்துறையினர் 50 சதவீதம் பேரும், பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 5 சதவீதம் பேரும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் வங்கி சேவைகள், தபால்சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இதனால் வங்கி, தபால் நிலையங்களில் பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதே போல் இன்சூரன்ஸ் பிரிமியம் கட்டுவதற்காக வந்த பொதுமக்களும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.


தஞ்சை மாவட்டத்தில் மாநில அரசு ஊழியர்கள் 600 பேரும், வருவாய்த்துறை ஊழியர்கள் 320 பேரும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மற்ற துறைகளை சேர்ந்த ஊழியர்கள் குறைந்த அளவே வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மின் வாரிய ஊழியர்கள் 21 சதவீதம் பேர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்கள் வழக்கம் போல பணிகளில் ஈடுபட்டனர்.

வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி தஞ்சை மாவட்டத்தில் 7 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவையாறு, செங்கிப்பட்டி, பாபநாசம் ஆகிய இடங்களில் பஸ் மறியல் போராட்டம் நடைபெற்றது. பஸ் மறியலில் ஈடுபட்டதாக 58 பேர் கைது செய்யப்பட்டனர். தஞ்சை, கும்பகோணத்தில் ரெயில் மறியல் செய்ய முயன்றனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 48 பேர் கைது செய்யப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com