தபால் துறை தேர்வு முடிவுகளை வெளியிட தடை; மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு

தபால் துறை தேர்வு முடிவுகளை வெளியிட மதுரை ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது.
தபால் துறை தேர்வு முடிவுகளை வெளியிட தடை; மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு
Published on

மதுரை,

மதுரை சொக்கிக்குளத்தை சேர்ந்த ஆசிர்வாதம், மதுரை ஐகோர்ட்டு கிளையில், நீதித்துறை பதிவாளர் தமிழ்ச்செல்வியிடம் அவசர வழக்கு ஒன்றை நேற்று தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசின் தபால்துறை சார்பில், தபால் அலுவலர் மற்றும் தபால் உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கு நாளை அதாவது இன்றைய தினம் எழுத்துத்தேர்வு நடக்க உள்ளது. இந்த தேர்வுக்கான கேள்விகள் அனைத்தும், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டுமே இருக்கும் என்று தபால்துறை சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆனால், கடந்த வருடம் நடத்தப்பட்ட தேர்வில் தமிழ் உள்பட 15 மாநில மொழிகளில் இந்த தேர்வுக்கான கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. இதற் கிடையே, கடைசி நேரத்தில் தபால்துறையின் இந்த அறிவிப்பு கிராமப்புற மாணவர்களின் எதிர் காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது. ஏற்கனவே, எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 வரை பள்ளிகளில் தமிழ்வழியில் படித்த மாணவர்கள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தேர்வு எழுதுவது சிரமம். எனவே, இந்த தேர்வுக்கு தடை விதிக்க வேண்டும். மேலும், பழைய அறிவிப்பின் படி தமிழில் தேர்வு நடத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

மதுரை ஐகோர்ட்டு கிளை இந்த வழக்கை நேற்று இரவு 9 மணிக்கு அவசரமாக விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. நீதிபதிகள் ரவிச்சந்திரபாபு மற்றும் மகாதேவன் ஆகியோர் கொண்ட அமர்வு தங்களது இல்லத்தில் வைத்து வழக்கை விசாரணை செய்தது. முடிவில், தபால்துறை நாளை(அதாவது இன்று) தேர்வை நடத்தலாம். ஆனால், இந்த கோர்ட்டு மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை முடிவுகளை வெளியிடக்கூடாது என்று உத்தரவிட்டனர். மேலும் இது குறித்து மத்திய அரசு வருகிற 19-ந்தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com