போடிமெட்டு மலைப்பாதையில் 800 அடி பள்ளத்தில் பாய்ந்த லாரி - டிரைவர் படுகாயம்

போடிமெட்டு மலைப் பாதையில் லாரி 800 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. டிரைவர் படுகாயம் அடைந்தார்.
போடிமெட்டு மலைப்பாதையில் 800 அடி பள்ளத்தில் பாய்ந்த லாரி - டிரைவர் படுகாயம்
Published on

போடி,

தேனியை சேர்ந்தவர் ராஜவேலு. இவருக்கு சொந்தமான லாரி தேனியில் உள்ள பலசரக்கு கடையில் இருந்து சாமான் களை ஏற்றிக் கொண்டு போடிமெட்டு மலைப்பாதை வழியாக கேரளா மாநிலம் ராஜாக்காடில் உள்ள பலசரக்கு கடைக்கு சென்று கொண்டு இருந்தது. லாரியை ராமசந்திரன் (வயது 42) என்பவர் ஓட்டினார். நேற்று அதிகாலை 3 மணிக்கு தேனியில் புறப்பட்ட சரக்கு லாரி காலை 9 மணி வரை ராஜாக்காடு சென்று சேரவில்லை.

இதுகுறித்து ராஜாக்காடில் உள்ள பலசரக்கு கடை உரிமையாளர் தேனியில் உள்ள கடைக்காரருக்கு தகவல் கொடுத்தார். எனவே லாரி மாயமானது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து குரங்கணி போலீசார் போடிமெட்டு மலைப்பாதையில் லாரியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

லாரி டிரைவரின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது, ரிங்டோன் மட்டும் ஒலித்தது. யாரும் எடுத்து பேசவில்லை. இதையடுத்து போலீசார் செல்போன் எங்கு உள்ளது? என்பதை வைத்து தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது போடி முந்தல் பகுதியிலிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் போடிமெட்டு மலைப்பாதையில் எஸ் வளைவிற்கு மேல் சுமார் 800 அடி பள்ளத்தில் லாரி பாய்ந்து கவிழ்ந்து கிடந்ததை மாலை 5 மணியளவில் போலீசார் கண்டுபிடித்தனர்.

மேலும் லாரியில் இருந்து சுமார் 50 அடி தூரத்தில் அதை ஓட்டி வந்த டிரைவர் ராமசந்திரன் பலத்த காயங்களுடன் கிடந்தார். அவரை போலீசார் மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. பள்ளத்தில் பாய்ந்ததில் லாரி நொறுங்கி கிடந்தது. விபத்து குறித்து குரங்கணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com