

புதுச்சேரி,
மத்திய உள்துறை அமைச்சகத்தினால் புதுச்சேரியில் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதமரின் முன்னணி திட்டங்கள் தொடர்பாக காணொலி காட்சி மூலம் கவர்னர் கிரண்பெடி ஆய்வு செய்தார். இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சக கூடுதல் செயலாளர் ஜெய்தீப் கோவிந்த், தலைமை செயலாளர் அஸ்வனிகுமார் மற்றும் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில், பிரதமரின் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டம், சாலையோர வியாபாரிகளுக்கான திட்டம், விவசாய சந்தை சீர்திருத்த திட்டம், மின்வினியோகத்தை தனியார் மயமாக்குதல் திட்டம், தேசிய சுகாதார திட்டம், மின்னணு சுகாதார அடையாள அட்டை திட்டம், மருத்துவ காப்பீடு திட்டம், அரசு அச்சகத்துறை செயல்பாடுகள் குறித்து பேசப்பட்டது. அப்போது மத்திய உள்துறை அமைச்சகத்தின் நிதி மற்றும் நிர்வாக ஆதரவினை வழங்க உறுதி அளிக்கப்பட்டது.
அப்போது பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்டத்தை புதுவையில் உள்ள அனைத்து வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கும் விரிவாக்கம் செய்ததற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நன்றி தெரிவித்தது. மின் வினியோகத்தை தனியார் மயமாக்குவது தொடர்பாக விவாதிக்க முதல்-அமைச்சர் மத்திய மின்துறை மந்திரியை சந்திக்க ஏற்பாடு செய்வது என்றும் தெரிவிக்கப்பட்டது இந்த திட்டங்களின் முன்னேற்றங்கள் குறித்து வருகிற மார்ச் மாதம் மீண்டும் ஆய்வு செய்யவும் முடிவு செய்யப்பட்டது.