தென் மாவட்டங்களில் முன்எச்சரிக்கை நடவடிக்கை: 1.92 லட்சம் பேரை நிவாரண முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடு; அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்

தென் மாவட்டங்களில் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக 1.92 லட்சம் பேரை நிவாரண முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடியில் புரெவி புயல் பாதிப்பு தடுக்க மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கைநடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம்
தூத்துக்குடியில் புரெவி புயல் பாதிப்பு தடுக்க மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கைநடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம்
Published on

அமைச்சர் உதயகுமார் ஆய்வு

புரெவி புயல் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று தூத்துக்குடிக்கு வந்தார்.

பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் குமார் ஜெயந்த், மாவட்ட போலீஸ் கண்காணிப்பு அலுவலரும், ஐ.ஜி.யுமான சாரங்கன்,

மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ., மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயகுமார், மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன், கூடுதல் கலெக்டர் (வருவாய்) விஷ்ணுசந்திரன்,

உதவி கலெக்டர் சிம்ரான் ஜீத் சிங் கலோன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் வக்கீல் செல்வகுமார், கருங்குளம் யூனியன் துணைத்தலைவர் லட்சுமணபெருமாள், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் வீரபாகு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பேட்டி

பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழையின் போது கடலில் உருவாகும் புயலை எதிர்கொண்டு மக்களை பாதுகாக்கின்ற நடவடிக்கைகளை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வருகிறார். தமிழகம் முழுவதும் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் பாதிக்கப்படக்கூடியவையாக கண்டறியப்பட்டு உள்ளது. அதில் தூத்துக்குடி மாவட்டத்தில் 36 இடங்கள் பாதிக்கப்படக்கூடிய இடங்களாக கண்டறியப்பட்டு உள்ளது. இதுதவிர கடலோர பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கும் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் 2 நாட்களுக்கு

முன்பாகவே 100 சதவீதம் மீனவர்கள் கரை திரும்பி உள்ளனர். அனைத்து படகுகளும் கரை திரும்பி உள்ளன.

1.92 லட்சம் பேர்

தூத்துக்குடி, மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் 7 ஆயிரத்து 605 ஏரிகள் உள்ளன. அதிக அளவு மழைப்பொழிவு இருந்ததால் 979 ஏரிகள் நிரம்பி உள்ளன. இந்த ஏரிகள் நிலையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். புயலால் பலத்த காற்று வீசும் என்பதால், முன்எச்சரிக்கை நடவடிக்கையாக விளம்பர பலகைகள், பட்டு போன மரங்களை அகற்றி பாதுகாப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

புயல் பாதிப்புகளை தடுக்க மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. மாநகராட்சி பகுதியில் நீர் தேங்கினால் உடனடியாக வெளியேற்ற கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அதே போன்று ஏரிகளில் உபரி நீரை உரிய பாதுகாப்போடு வெளியேற்றவும், தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், முன்எச்சரிக்கை நடவடிக்கையாக ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் 490 நிவாரண முகாம்களில் சுமார் 1 லட்சத்து 92 ஆயிரம் பேரை தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

ஒத்துழைப்பு

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக 20 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன. தற்போது 2 முகாம்களில் 150 பேர் நேற்று மாலை முதல் தங்க வைக்கபட்டு உள்ளனர். தேவையான உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தாழ்வான பகுதியில் உள்ள மக்களை நிவாரண முகாம்களுக்கு கொண்டு வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மக்களுக்கு அரசின் வேண்டுகோள் என்னவென்றால் நீங்கள் இருக்கும் இடம் பாதுகாப்பானதா? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஒரு சதவீதம் சந்தேகம் ஏற்பட்டாலும்கூட அரசு ஏற்பாடு செய்துள்ள பல்நோக்கு பாதுகாப்பு மையங்களுக்கு உடனடியாக சென்றுவிட வேண்டும். புயல் காலங்களில் தென் மாவட்ட மக்கள் வெளியே வர வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.

அதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர் கடம்பூர் ராஜூ

அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறுகையில், புரெவி புயல் தென் மாவட்டங்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்ற சூழ்நிலையில் தேவையான அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து மாவட்ட நிர்வாகம் முழு வீச்சில் தயார் நிலையில் உள்ளது. தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தடையின்றி கிடைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்து

கொடுக்கப்பட்டுள்ளன. அனைத்து விவசாயிகளும் பயிர் காப்பீடு செய்து பயன் பெறும் நிலையை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து உள்ளது என்றார்.

முன்னதாக தூத்துக்குடி மாவட்டத்துக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய மூன்று 108 ஆம்புலன்ஸ்களின் சாவியை, அதன் டிரைவர்களிடம் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ ஆகியோர் வழங்கினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com