திருமணமாகாமல் கர்ப்பம்: இளம்பெண்ணின் வயிற்றில் வளரும் 6 மாத கருவை கலைக்க - ஐகோர்ட்டு அனுமதி

திருமணமாகாமல் கர்ப்பம் அடைந்த இளம்பெண்ணின் வயிற்றில் வளரும் 6 மாத கருவை கலைக்க மும்பை ஐகோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
திருமணமாகாமல் கர்ப்பம்: இளம்பெண்ணின் வயிற்றில் வளரும் 6 மாத கருவை கலைக்க - ஐகோர்ட்டு அனுமதி
Published on

மும்பை,

ரத்னகிரி மாவட்டத்தை சேர்ந்த திருமணமாகாத 23 வயது இளம்பெண் ஒருவர் மும்பை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

ஒருவருடன் பரஸ்பர சம்மதத்துடன் நடந்த உறவின் காரணமாக கர்ப்பம் அடைந்தேன். கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கருவை கலைப்பதற்காக டாக்டர்களை அணுக முடியவில்லை. இதனால் தற்போது வயிற்றில் வளரும் கரு 23 வாரங்களை (சுமார் 6 மாதம்) கடந்து விட்டது. திருமணமாகாமல் அந்த குழந்தையை பெற்றெடுப்பது எனக்கு சமூக களங்கத்தை ஏற்படுத்தும். மேலும் ஒற்றை பெற்றோராக குழந்தையை வளர்க்க முடியாது. சமூக களங்கம் காரணமாக எதிர்காலத்தில் திருமணம் செய்து கொள்வது சாத்தியமில்லை. தனது இந்த கர்ப்பத்தால் தான் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் வேதனைகளை சந்தித்து வருகிறேன். எனவே இந்த கருவை கலைக்க அனுமதி அளிக்க வேண்டும் என கூறியிருந்தார்.

அந்த மனு மீதான விசாரணை கடந்த 29-ந் தேதி மும்பை ஐகோர்ட்டில் நடந்த போது, 20 வாரத்திற்கு பிறகு கர்ப்பத்தை கலைப்பது சாதாரண விஷயம் அல்ல என்பதால் கருவை கலைப்பதற்கான சாத்தியக்கூறு,இளம்பெண்ணின் உடல்நிலை குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய மருத்துவ குழுவுக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த நிலையில், நேற்று வழக்கு விசாரணை நீதிபதிகள் எஸ்.ஜே. கதவல்லா மற்றும் சுந்தி தவாடே ஆகியோர் அடங்கிய வேறொரு அமர்வில் நடந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இளம்பெண்ணின் வயிற்றில் வளரும் கருவை கலைக்க அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.

நீதிபதிகள் தங்களது உத்தரவில் கூறியிருப்பதாவது:- இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட இளம்பெண்ணுக்கு உடல் ஆரோக்கியத்திற்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தவில்லை என்றாலும், அவரது வயிற்றில் வளரும் கரு அவரது மன ஆரோக்கியத்தில் மோசமாக தாக்கத்தை ஏற்படுத்த கூடும். எனவே மனுதாரர் கர்ப்பத்தை தொடர நிர்பந்திக்கப்பட்டால், அது அவரது உடலுக்கும், மனதிற்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என நாங்கள் கருதுகிறோம். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com