சிதம்பரம் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பிரேமலதா விஜயகாந்த் வழங்கினார்

சிதம்பரம் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண பொருட்களை பிரேமலதா விஜயகாந்த் வழங்கினார்.
சிதம்பரம் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பிரேமலதா விஜயகாந்த் வழங்கினார்
Published on

அண்ணாமலைநகர்,

கடலூர் மாவட்டத்தில் புரெவி புயல் காரணமாக கடந்த வாரம் தொடர் கனமழை பெய்தது. இந்த மழையால் சிதம்பரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகளை மழைவெள்ளம் சூழ்ந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபற்றி அறிந்த தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், நேற்று காலை சிதம்பரம் வருகை தந்தார். பின்னர் அவர், தில்லை காளியம்மன் கோவில் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண பொருட்களை வழங்கினார்.

இதனை தொடர்ந்து நான்முனிசிபல் ஊராட்சியில் பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். பின்னர் எம்.கே.தோட்டம் முருகன் கோவில் பகுதியில் குடியிருப்புகளை மழைவெள்ளம் சூழ்ந்திருந்ததை பார்வையிட்டார். இதையடுத்து பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முதலில் களத்தில் இறங்கும்

கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரை தானே, நிவர், புரெவி புயல் என எந்த புயலாக இருந்தாலும் டிசம்பர் மாதம் வந்து பேரழிவை கொடுத்துவிட்டு செல்கிறது. எந்த புயல், எந்த பேரிடர் ஏற்பட்டாலும் தே.மு.தி.க. தான் முதலில் களத்தில் இறங்கி மக்களுக்காக பாடுபடும்.

அதேபோல் சிதம்பரம், சீர்காழி, திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரடியாக ஆய்வு செய்து மக்களை சந்தித்து நிவாரணம் வழங்கிக் கொண்டிருக்கிறோம்.

நடவடிக்கை

இங்கு ஏராளமான வயல்களில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதுபற்றி மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு சென்று விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்வோம். வேளாண் சட்டத்திற்கு எதிராக தொடர்ந்து விவசாயிகள் போராடி வருகின்றனர். மத்திய அரசும், விவசாயிகளிடம் 9 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இருதரப்பும் விட்டுக்கொடுத்து பேச்சுவார்த்தை நடத்தி மத்திய அரசும், விவசாயிகளும் ஒருங்கிணைந்து இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

அப்போது முன்னாள் எம்.எல்.ஏ. பார்த்தசாரதி, முன்னாள் துணை செயலாளர் உமாநாத், நான்முனிசிபல் ஊராட்சி மன்ற தலைவர் பத்மசுந்தரி உமாநாத், ஒன்றிய செயலாளர்கள் சீனுசங்கர், மாரியப்பன், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் ரிஸ்வானா பர்வீன், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் முகமது அயூப், மாவட்ட துணை செயலாளர்கள் ராஜ், பாலச்சந்தர், நகர செயலாளர் விஜயகுமார், வார்டு செயலாளர் தில்லைராஜா, சம்பத்ராஜ், ஸ்ரீதர், பொருளாளர் கலைப்புலி கணேசன், துணை செயலாளர் அய்யப்பன், நிர்வாகிகள் சுரேஷ், மணிகண்டன், சிவா, முருகவேல், வினோத் ஆகியோர் உடனிருந்தனர்.

நிவாரண பொருட்கள்

முன்னதாக பரங்கிப்பேட்டை அருகே உள்ள புதுச்சத்திரம், சிலம்பிமங்கலம், சின்னாண்டிக்குழி ஆகிய பகுதிகளில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை பிரேமலதா விஜயகாந்த் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். அப்போது மாவட்ட செயலாளர் சிவக்கொழுந்து, அவைத்தலைவர் பாலு, வடக்கு மாவட்ட துணைத்தலைவர் ராஜாராமன், மாநில செயற்குழு உறுப்பினர் தமிழரசன், மாவட்ட துணை செயலாளர்கள் பானுசந்தர், ராஜூ, ஒன்றிய செயலாளர் சந்திரகுமார், நிர்வாகிகள் சதீஷ் ராஜ்குமார், ஹேமநாதன், பிரேமா, நாகராஜன், முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com