உள்ளாட்சி தேர்தலுக்கான ஆயத்த பணி: தஞ்சையில் மாதிரி வாக்குப்பதிவு - கலெக்டர் மேற்பார்வையில் நடந்தது

தஞ்சையில் உள்ளாட்சி தேர்தலுக்கான ஆயத்த பணி நடைபெற்று வரும் நிலையில் மாதிரி வாக்குப்பதிவு கலெக்டர் அண்ணாதுரை மேற்பார்வையில் நடந்தது.
உள்ளாட்சி தேர்தலுக்கான ஆயத்த பணி: தஞ்சையில் மாதிரி வாக்குப்பதிவு - கலெக்டர் மேற்பார்வையில் நடந்தது
Published on

தஞ்சாவூர்,

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படாவிட்டாலும் அதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. தஞ்சை மாவட்டத்திலும் உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகியவற்றுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களுக்கு வாக்குச்சீட்டு மூலம் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி கர்நாடக மாநிலத்தில் இருந்து லாரிகளில் கொண்டு வரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தஞ்சை பழைய கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த எந்திரங்களை பெல் நிறுவன பொறியாளர்கள் ஆய்வு செய்தனர். வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னத்தை அழுத்தும்போது அது அதே சின்னத்தில் தான் வாக்கு பதிவாகிறது என்பதை அரசியல் கட்சியினருக்கு தெரியப்படுத்தும் வகையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி தஞ்சை பழைய கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு செய்யப்பட்ட எந்திரங்களை கொண்டு மாதிரி வாக்குப்பதிவு நேற்று நடந்தது. அரசு விதிகளின்படி மொத்தமுள்ள 1,789 கட்டுப்பாட்டு கருவிகளில் 5 சதவீத கருவிகள் தேர்வு செய்யப்பட்டு, 93 கட்டுப்பாட்டு கருவி மற்றும் வாக்குப்பதிவு எந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.

கலெக்டர் அண்ணாதுரை மேற்பார்வையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் இந்த வாக்குப்பதிவு நடைபெற்றது. 500 முதல் 1,200 வாக்குகள் வரை பதிவு செய்யப்பட்டு சரிபார்க்கப்பட்டது. இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(உள்ளாட்சி தேர்தல்) பாரதிதாசன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com