டெல்லியில் இருந்து விமானம் மூலம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கோவை வந்தார் - கவர்னர், அமைச்சர் வரவேற்றனர்

கோவை மற்றும் சூலூரில் இன்று (திங்கட்கிழமை) நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று கோவை வந்தார். அவரை கவர்னர் பன்வாரிலால் புரோகித், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் வரவேற்றனர்.
டெல்லியில் இருந்து விமானம் மூலம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கோவை வந்தார் - கவர்னர், அமைச்சர் வரவேற்றனர்
Published on

கோவை,

கோவையை அடுத்த சூலூர் விமானப்படை தளத்தில் உள்ள 5-வது அணி பழுது நீக்கும் மையம் (ரிப்பேர் டெப்போ) மற்றும் ஆந்திராவில் உள்ள ஹகிம்பட்டி விமானத்தளத்துக்கு சிறந்த சேவைக்கான விருது இன்று (திங்கட்கிழமை) வழங்கப்பட உள்ளது.

இந்த விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு விருது வழங்குகிறார். பின்னர் அவர் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் இன்று இரவு நடக்கும் மகா சிவராத்திரி விழாவிலும் கலந்து கொள்கிறார்.

இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று பகல் 12.35 மணியளவில் டெல்லியில் இருந்து விமானப்படை விமானம் மூலம் புறப்பட்டு பிற்பகல் 3.25 மணிக்கு கோவை வந்தார். விமான நிலையத்தில் அவரை கவர்னர் பன்வாரிலால் புரோகித், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, போலீஸ் டி.ஜி.பி. ராஜேந்திரன், கலெக்டர் ராஜாமணி, கோவை மாநகராட்சி தனி அதிகாரி ஸ்ரவன்குமார் ஜடாவத் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

இதையடுத்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கார் மூலம் கோவை ரேஸ்கோர்சில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு 3.50 மணிக்கு வந்து சேர்ந்தார். அங்கு தங்கிய அவர் மாலை 6 மணி முதல் 7 மணி வரை முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேசினார். அதைத்தொடர்ந்து ஜனாதிபதி இரவில் தங்கினார்.

கோவையை அடுத்த சூலூர் விமானப்படை தளத்தில் இன்று (திங்கட்கிழமை) நடக்கும் விருது வழங்கும் நிகழ்ச்சிகளில் ஜனாதிபதி கலந்து கொள்கிறார். இதற்காக அவர் இன்று காலை 8.05 மணிக்கு கார் மூலம் சூலூர் செல்கிறார். அந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு அவர் கார் மூலம் 11.10 மணிக்கு கோவை வருகிறார். மதியம் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கும் அவர் மாலை 4.40 மணிக்கு கார் மூலம் கோவை விமான நிலையம் செல்கிறார்.

அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் 5.25 மணிக்கு ஈஷா யோகா மையம் செல்கிறார். அங்கு நடக்கும் மகாசிவராத்திரி விழாவில் கலந்து கொண்ட பின்னர் இரவு 7 மணிக்கு புறப்பட்டு 7.45 மணிக்கு கோவை வந்தடைகிறார். இரவில் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கும் ஜனாதிபதி நாளை(செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு தனி விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கோவை வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com