வெள்ள பாதிப்புகளை தடுக்க வீரராகவன் ஏரியை சீரமைக்க வேண்டும்

சென்னையை அடுத்த குரோம்பேட்டை பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுக்க வீரராகவன் ஏரியை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெள்ள பாதிப்புகளை தடுக்க வீரராகவன் ஏரியை சீரமைக்க வேண்டும்
Published on

தாம்பரம்,

சென்னையை அடுத்த குரோம்பேட்டை நியூ காலனி பகுதியில் வீரராகவன் ஏரி உள்ளது. பரங்கிமலை ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரியின் பரப்பளவு 60 ஏக்கர் ஆகும். 50 ஆண்டுகளுக்கு முன்பு கடல்போல் காட்சியளித்த இந்த ஏரி, ஒவ்வொரு மழை காலங்களிலும் நிரம்பி, ஜி.எஸ்.டி. சாலை வரை அதன் தண்ணீர் தொடும்.

அப்போது, இந்த ஏரியை நம்பி குரோம்பேட்டை, கக்கலஞ்சாவடி பகுதிகளில் விவசாயம் நடந்து வந்தது. மழை காலத்தில், பச்சை மலையில் இருந்து வரும் ஒரு பகுதி தண்ணீர், கக்கலஞ்சாவடி பகுதியில் வெளியேறும் தண்ணீர் வீரராகவன் ஏரியில் கலக்கும். 1980-ம் ஆண்டுக்கு பிறகு, இந்த ஏரியை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.

அதை சாதகமாக பயன்படுத்தி, ஏரியை ஆக்கிரமிக்க தொடங்கினர். லட்சுமிபுரம், நியூ காலனி, கக்கலஞ்சாவடி என ஏரியை சுற்றி பலரும் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். ஏரி தற்போது 20 ஏக்கர் அளவில் சுருங்கிவிட்டது.

ஏரியில் மழை நீரை காட்டிலும் லட்சுமிபுரம், துர்காநகர், நியூ காலனி பகுதி கழிவு நீர் அதிகம் கலந்ததால் ஏரி நீர் முழுவதும் கழிவு நீராக காட்சியளிக்கிறது. இந்த கழிவு நீரால் ஏரியின் பெரும்பகுதி மாசடைந்து ஆகாய தாமரை செடிகள் வளர்ந்துள்ளது. ஏரியில் உள்ள ஆகாய தாமரை செடிகளால் அந்த பகுதியில் நிலத்தடி நீர் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது குரோம்பேட்டை அரசு மருத்துவமனை, தாம்பரம் சானடோரியம் காசநோய் மருத்துவமனை கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்த மருத்துவமனைகளில் இருந்து வெளியேறும் மழைநீர் முழுவதுமாக வீரராகவன் ஏரியில் கலந்து வருகிறது. அதிக வெள்ளம் வரும்போது ஏரி முறையாக சீரமைக்கப்படவில்லை என்றால் மீண்டும் அரசு மருத்துவமனைகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும் உள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் அதை எதிர்கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை காஞ்சீபுரம் மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது.

இந்த நிலையில் ஆகாய தாமரை செடிகளையும், வரத்து கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்றி வீரராகவன் ஏரியை மழை காலத்திற்கு முன்பு சீரமைத்தால் தான் இந்த பகுதி வெள்ள பாதிப்பை தடுக்க முடியும் என்ற நிலை உள்ளது.

பரங்கிமலை ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரியை சீரமைக்க போதிய நிதியை அரசு ஒதுக்க வேண்டும். நிதி ஒதுக்கி வருவாய்த்துறையினர் வெள்ள பாதிப்பு ஏற்படாத வகையில் முதல் கட்டமாக கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி ஆகாய தாமரை செடிகளை முற்றிலுமாக அகற்றி, கரையை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com