தினமும் 200 லாரிகளில் விற்பனை நிலத்தடி நீர் எடுப்பதை தடுக்க கோரி கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

நிலத்தடி நீரை அனுமதியின்றி எடுத்து தினமும் 200 லாரிகளில் விற்பனை செய்வதை தடுக்க கோரி பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
தினமும் 200 லாரிகளில் விற்பனை நிலத்தடி நீர் எடுப்பதை தடுக்க கோரி கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை
Published on

பொன்னேரி,

பொன்னேரி அருகே உள்ள புதூர் ஊராட்சியில் அடங்கியது கொக்குமேடு கிராமம். இங்கு பெருங்காவூர் ஏரி நீரை பயன்படுத்தி விவசாயம் செய்து வருகின்றனர். கொக்குமேடு கிராமத்தை சுற்றி பெருங்காவூர் ஊராட்சியில் அடங்கிய பெருங்காவூர், மேட்டூர், மேட்டுப்பாளையம், பெரியகாலனி, காந்திநகர் மேட்டுகாலனி ஆகிய கிராமங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களின் வாழ்வாதாரமாக பயிர்த்தொழில் விளங்குகிறது.

இப்பகுதி மக்கள் பெருங்காவூர் ஏரி நீரை பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் பெருங்காவூர் ஏரிக்கு அருகே உள்ள கொக்குமேடு பகுதியில் தனி நபர்கள் சிலர் அனுமதி இன்றி 7 ஆழ்துளை கிணறுகள் அமைத்து இரவு பகல் பாராமல் 200-க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகளில் நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்து வருகின்றனர். இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது.

கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் விவசாயத்திற்கு தேவையான நீர் கிடைக்காமல் உள்ளது. அரசு அனுமதி இல்லாமல் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை தடுக்க கோரி 2 வாரங்களுக்கு முன்பு பெருங்காவூர் ஏரி நீரை பயன்படுத்தும் சங்கத்தை சேர்ந்த கிராமமக்கள் ஒன்று சேர்ந்து கொக்குமேடு கிராமத்தின் வழியாக செல்லும் ஒரக்காடு அருமந்தை நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியபோது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்தநிலையில் மீண்டும் 200-க்கும் மேற்பட்ட லாரிகளில் அரசு அனுமதி இல்லாமல் குடிநீர் திருட்டுத்தனமாக எடுத்து செல்லப்படுகிறது.

இதனையடுத்து நேற்று கிராம மக்கள் ஒன்று சேர்ந்து பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர் பின்னர் கோட்டாட்சியர் நந்தகுமாரிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து நாளை (இன்று) அரசு அனுமதி இல்லாமல் கள்ளத்தனமாக குடிநீர் திருடப்படுவதாக கூறப்படும் இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாட்சியர் உறுதி அளித்தார். இதனையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com