கொரோனா தொற்று அதிகரிப்பை தடுக்க கோவை மாவட்டத்தில் 36 மணிநேரம் முழு ஊரடங்கு - இன்று மாலை முதல் அமல்

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக 36 மணி நேரம் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு இன்று (சனிக்கிழமை) மாலை முதல் அமல்படுத்தப்படுவதாக கலெக்டர் ராஜாமணி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனா தொற்று அதிகரிப்பை தடுக்க கோவை மாவட்டத்தில் 36 மணிநேரம் முழு ஊரடங்கு - இன்று மாலை முதல் அமல்
Published on

கோவை,

கொரோனா நோய் தொற்றினை தடுக்கவும், பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையிலும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் இந்த மாதத்தில் வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோவை மாவட்டத்தில் கடந்த 5, 12 மற்றும் 19-ந் தேதிகளில் எந்தவிதமான தளர்வுகள் இன்றி ஊரடங்கு முழுமையாக அமல்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் இன்று (சனிக் கிழமை) மாலை 5 மணி முதல் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 6 மணி வரை 36 மணி நேரம் எந்த தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அப்போது மருத்துவ சேவைகள், பால் மற்றும் மின்சாரம் போன்ற அத்தியாவசிய சேவைகள் மட்டும் அனுமதிக்கப்படும். வேறு எதுவும் அனுமதிக்கப்பட மாட்டாது. ஊரடங்கை மீறும் வகையில் தேவையின்றி வெளியில் நடமாடுவோர் மீது போலீசார் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உழவர் சந்தைகள், மார்க்கெட், மளிகைக்கடைகள், மீன் மார்க்கெட், பூ மார்க்கெட், இறைச்சிக்கடைகள், டாஸ்மாக் கடைகள், வர்த்தக தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட எந்த கடைகளும் இயங்காது. இதற்கு அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கூடுதலாக 12 மணி நேரம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது ஏன்? என்பது குறித்து கோவை மாவட்ட வருவாய் அதிகாரி ராம துரைமுருகன் கூறியதாவது:-

ஞாயிற்றுக்கிழமை தளர்வுகள் இல்லாத ஊரடங்கு பிறப்பிக்கும் போது முன்தின நாளான சனிக்கிழமை மாலையில் அதிகளவில் கூட்டம் காணப்படுகிறது. அந்த கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காகவும், கடந்த சில நாட்களாக தொற்று அதிகளவில் பரவி வருவதாலும் அதை கட்டுப்படுத்த கூடுதலாக 12 மணி நேரம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு பிறப்பிக்கும் போது முதல் நாள் இரவு வரையில் மீன், இறைச்சி மற்றும் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. சில இடங்களில் சமூக இடைவெளியின்றி மக்கள் பொருட்களை வாங்கிச்செல்கிறார்கள். அந்த கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக ஞாயிற்றுக்கிழமை 24 மணி நேரம் தவிர இன்று மாலை 5 மணி முதல் நாளை காலை 6 மணி வரை கூடுதலாக 12 மணி நேரம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com