பருவமழை தொடங்கும் முன்னரே காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்: கலெக்டர் சி.கதிரவன் தகவல்

பருவமழை தொடங்கும் முன்னரே காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.
பருவமழை தொடங்கும் முன்னரே காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்: கலெக்டர் சி.கதிரவன் தகவல்
Published on

ஈரோடு,

பருவமழை தொடங்கும் முன்னரே காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் பருவமழை தொடங்கும் முன்னரே காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உள்ளாட்சித்துறை மற்றும் பொது சுகாதாரத்துறை மூலம் பாதுகாப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் 30 சுகாதார ஆய்வாளர்களை கொண்டு அரசு தலைமை மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகளின் முகவரிகள் பெறப்பட்டு மாவட்ட அளவில் தொகுக்கப்பட்டு பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு பட்டியல் தயார் செய்யப்பட்ட விவரத்தினை வட்டாரம் வாரியாக பிரிக்கப்பட்டு 14 வட்டாரங்கள், மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கு அனுப்பப்பட உள்ளது.

இந்த முகவரிகள் அடங்கிய கிராமங்களில் வட்டார மருத்துவ அலுவலர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். ஒவ்வொரு பேரூராட்சிகளிலும் 10 பேர் வீதம் 420 களப்பணியாளர்களையும், கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் நகராட்சிகளில் 141 களப்பணியாளர்களும் என மொத்தம் 561 களப்பணியாளர்களை கொண்டு வீட்டின் உட்புறமும், வெளிபுறமும் புகை மருந்து அடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொசு புழுக்களை ஒழிப்பதற்கு அபேட் மருந்து தண்ணீரில் ஊற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காய்ச்சல் கண்ட பகுதிகளில் நிலவேம்பு கசாயம் வழங்கப்படும். துண்டு பிரசுரங்கள் மூலம் காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளை கண்காணிக்க பிளாஸ்டிக் டப்பாக்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருள்களை முற்றிலும் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. உடைந்த பிளாஸ்டிக் பொருள்களில் மழை நீர் தேங்கி அதன் மூலம் கொசு உற்பத்தியாகி, டெங்கு மற்றும் சிக்கன்குனியா போன்ற நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது வீட்டில் பிளாஸ்டிக் பொருள்களை முற்றிலும் ஒழித்து சுற்றுப்புறத்தை துய்மையாக வைத்து கொள்ள வேண்டும்.

மேலும் தங்கள் வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டிகளை பிளச்சிங் பவுடரை கொண்டு சுத்தமாக கழுவி உலர்த்திய பிறகு தண்ணீர் பிடிக்க வேண்டும். பிடித்த தண்ணீரை காற்று புகா வண்ணம் துணிகளை கொண்டு கட்டி மூடி வைக்க வேண்டும். டயர்கள், பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் சிரட்டை, உரல், ஆட்டுக்கல் போன்ற வீட்டில் உபயோகப்படாத பொருட்களில் மழைநீர் தேங்காமல் அகற்றிட வேண்டும்.

சுகாதார பணியாளர்கள் வரும்போது வீட்டின் உட்புறம் புகை மருந்து அடிக்க அனுமதி அளித்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். எனவே, வீடு வீடாக செல்லும் பொது சுகாதாரத்துறை களப்பணியாளர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் ஒத்துழைப்பு அளிக்காதவர்கள் மீதும், கொசுப்புழு வீட்டில் வளர்ப்பவர்கள் மீதும் பொது சுகாதாரத்துறை சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே, காய்ச்சல் கண்ட நபர்கள் எவரேனும் இருப்பின் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தையோ அல்லது அரசு மருத்துவமனையையோ அணுகி சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் ஈரோடு மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக மாற்றி வளமாக வாழ பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com