உணவுக்கு விலை பணமல்ல.. பாசம்..

அது கடற்கரை பகுதியில் அமைந்திருக்கும் ஊர். அங்குள்ள இளைஞர்கள் சிலர் ஒன்றுகூடி, ஊருக்கு நல்லது செய்வது எப்படி? என்ற கோணத்தில் சிந்தித்து பேசிக்கொண்டிருந்தார்கள்.
உணவுக்கு விலை பணமல்ல.. பாசம்..
Published on

அப்போது அவர்களில் ஒருவர், இந்த ஊரில் பசியோடு இருக்கும் ஒவ்வொருவருக்கும் உணவளிக்கவேண்டும். உணவை அவர்களது வீடு தேடிச் சென்று தரவேண்டும். யாருக்கு உணவு தேவை என்பதை கண்டுபிடித்து சொல்லுங்கள். இனி யாரும் பட்டினி கிடக்கக்கூடாது. யாராவது பட்டினி கிடந்தால் நாம்தான் அதற்கு காரணம்.. என்றார். இத்தனைக்கும் அந்த ஊரை சேர்ந்தவர்கள் வசதிபடைத்தவர்கள் இல்லை. நல்ல மனது படைத்தவர்களாக இருந்தார்கள்.

அவர்கள் பசித்தவர்களுக்கு உணவு வழங்கினார்கள். ஐந்து வருடங்களுக்கு முன்பு தொடங்கிய இந்த பசியாற்றும் சேவை இன்றும் சுவையாக தொடர்ந்துகொண்டிருக்கி றது. தினமும் மதிய உணவு அங்கு 12 மணிக்கு தயாராகிவிடுகிறது. உணவுகளின் மணம் பரவும் அந்த நேரத்தில் யார் வேண்டுமானாலும் அங்கு வந்து உண்ணலாம். சாம்பார், பொரியல், கூட்டு, மீன் போன்ற பலவகை உணவுகள் வழங்கப்படுகின்றன. இங்கு உணவு பரிமாறும் நேரத்தில் சாப்பிடுவதற்கு மட்டுமல்ல, உணவு பரிமாறுவதற்கும், அது தொடர்பான உதவிகள் செய்வதற்கும் பலர் ஓடி வருகிறார்கள். அருகில் உள்ள கல்லூரி மாணவ- மாணவிகள் பாத்திரங்களை துலக்கிகொடுக்கிறார்கள்.

தினமும் 700-க்கும் அதிகமானவர்கள் அங்கு மதிய உணவு சாப்பிட வருகிறார்கள். அவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் பணம் கொடுக்க முடியாத ஏழைகள். பாதி பேர் தனது சாப்பாட்டிற்கான பணத்தை மட்டும் கொடுக்கிறார்கள். சிலர் அதிகமாக பணம் வழங்குகிறார்கள். பணத்தை அங்கிருக்கும் பெட்டியில் போட்டுவிட்டு சென்றால் போதும். அங்கு யாரும் யாரிடமும் பணம் கேட்பதில்லை.

பாசத்தோடு பசியாற்றும் இந்த அமைப்பு ஆலப்புழை கடற்பகுதியில் உள்ள பாதிரப்பள்ளி என்ற ஊரில் இயங்கிவருகிறது. சி.ஜி.பிரான்சிஸ் நினைவு அறக்கட்டளை என்ற பெயரில் உருவானது. சி.பி.ஐ.எம். கட்சியின் உள்ளூர் அமைப்பு இதனை இயக்கிவருகிறது.

தினமும் நான்கு நேரம் இங்கு உணவு தருகிறார்கள். காலையில் இட்லி, தோசை, புட்டு போன்றவைகளில் ஏதாவது ஒன்று கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் சில நாட்கள் மதிய நேரம் இறைச்சி வழங்குகிறார்கள். இல்லாவிட்டால் மீன் கிடைக்கும். மதிய உணவு மற்றும் தேன் கலந்த டீயும் உண்டு. அந்த பகுதியில் விளையும் நாட்டு காய் கறிகள் அதிகம் சமைத்து பரிமாறப்படுகின்றன. இரவில் கஞ்சி வழங்குகிறார்கள். கூட்டுக்கு பொரியல் அல்லது ஊறுகாய் தருகிறார்கள். ஆவியில் வேகவைத்த பொருட்கள்தான் அதிகம். வறுத்தவைகளோ, பொரித்தவைகளோ, விசேஷ உணவுகளோ கிடையாது. அவைகளை வழங்கினால் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பேதம் வந்து விடும் என்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com