சொட்டுநீர் பாசனம் மூலம் பயன் அடைந்த கிருஷ்ணகிரி விவசாயியுடன், பிரதமர் மோடி கலந்துரையாடல்; விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தல்

சொட்டுநீர் பாசனம் மூலம் பயன் அடைந்த கிருஷ்ணகிரியைச் சேர்ந்த விவசாயியுடன், பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, சொட்டுநீர் பாசனம் குறித்து விவசாயிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
கிருஷ்ணகிரியைச் சேர்ந்த விவசாயியுடன் பிரதமர் மோடி, காணொலி காட்சி மூலமாக கலந்துரையாடிய போது
கிருஷ்ணகிரியைச் சேர்ந்த விவசாயியுடன் பிரதமர் மோடி, காணொலி காட்சி மூலமாக கலந்துரையாடிய போது
Published on

விவசாயியுடன் கலந்துரையாடல்

பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் (டிசம்பர் 2020 -மார்ச் 2021) ரூ.18 ஆயிரம் கோடியை 9 கோடி விவசாய குடும்பங்களின் வங்கி கணக்கிற்கு பிரதமர் மோடி நேற்று விடுவித்தார். இதையொட்டி காணொலி காட்சி மூலம் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி விவசாயிகளிடம் கலந்துரையாடினார்.

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டு இருந்த காணொலி காட்சி மூலம் கோதிகுட்லப்பள்ளியை சேர்ந்த விவசாயி சுப்பிரமணியிடம் பிரதமர் மோடி பேசினார். அப்போது பிரதமர் மோடி பேசுகையில், உங்கள் பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு உள்ளதா? என கேட்டார்.

வருவாய் கிடைத்துள்ளது

இதற்கு பதிலளித்த விவசாயி, எங்கள் குடும்பத்தில் 4 பேர் இருக்கிறோம். விவசாயம் செய்து வருகிறோம். எங்களுக்கு சொந்தமாக 4 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் 2 ஏக்கர் தக்காளியும், 1 ஏக்கர் பட்டன் ரோஜா நடவு செய்துள்ளோம். தண்ணீர் பற்றாக்குறை சமாளிக்க தோட்டக்கலைத்துறை மூலம் பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் சொட்டுநீர் பாசனம் அமைக்கப்பட்டு விவசாயம் செய்து வருகிறோம்.

கடந்த ஆண்டு சொட்டுநீர் பாசனம் இல்லாமல், வடிகால் முறையில் ஒரு ஏக்கர் நிலத்தில் மட்டுமே விவசாயம் செய்ய முடிந்தது. அப்போது எங்களுக்கு ரூ.40 ஆயிரம் மட்டுமே லாபம் கிடைத்தது. தற்போது 100 சதவீத மானியத்தில் ரூ.1 லட்சத்து 33 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சொட்டுநீர் பாசனம் மூலம், இந்த ஆண்டு ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கிடைத்தது. இதில் செலவுகள் ரூ.40 ஆயிரம் ஆனது. மீதி ரூ.1 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது என்றார்.

விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்

இதற்கு பதிலளித்து பிரதமர் மோடி பேசியதாவது:-

விவசாயி சுப்பிரமணிக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் சொட்டுநீர் பாசனம் அமைத்து விவசாயம் மேற்கொண்டதால் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி, பலன் அடைந்துள்ளீர்கள். உங்களுக்கு சொட்டுநீர் பாசனம் மூலம் பாசன பரப்பும், விளைச்சலும் அதிகரித்துள்ளது. இது தொடர்பாக விவசாயிகளிடம் நீங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வணக்கம். நன்றி. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.இந்த நிகழ்ச்சியின் போது கிருஷ்ணகிரி கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி மற்றும் தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com