

பெங்களூரு,
கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் முதல் வாரத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி கர்நாடக பா.ஜனதா சார்பில் பெங்களூருவில் கடந்த 4-ந் தேதி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த கட்சி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். சித்தராமையா அரசை அவர் கடுமையாக விமர்சித்தார்.
10 சதவீத கமிஷன் அரசு என்றும், குற்றவாளிகளின் ஆட்சி நடப்பதாகவும் குறை கூறினார். பதிலுக்கு சித்தராமையாவும் பா.ஜனதா ஆளும் மாநிலங்களின் தோல்விகளை பட்டியலிட்டு பதிலடி கொடுத்தார். பிரதமர் பதவி வகிக்க மோடிக்கு தகுதி இல்லை என்றும் கடும் விமர்சனத்தை முன்வைத்தார். இந்த நிலையில் சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் மோடிக்கு 4 சவால்களை விடுத்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-
ஊழல் ஒழிப்பு குறித்து மோடி பேசுவதை நான் பாராட்டுகிறேன். 1. ஊழல் ஒழிப்பு குறித்து பேசும் நீங்கள்(மோடி) லோக்பால் அமைப்பை உருவாக்குங்கள், 2. நீதிபதி லோயா மரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடுங்கள், 3. பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாவின் சொத்துகள் குறுகிய காலத்தில் அபரிமிதமான வளர்ச்சி கண்டது குறித்து விசாரணை நடத்துங்கள், 4. ஊழல் கறை படியாதவரை உங்களின் கட்சியின் முதல்-மந்திரி வேட்பாளராக அறிவிக்க முடியுமா? என்று குறிப்பிட்டுள்ளார்.