பிரதமர் மோடியின் கனவு திட்டமான புல்லட் ரெயில் திட்டம் குறித்து மறுஆய்வு - முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அதிரடி உத்தரவு

மும்பை- ஆமதாபாத் இடையே செயல்படுத்தப்படும் புல்லட் ரெயில் திட்டம் குறித்து மறுஆய்வு செய்ய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
பிரதமர் மோடியின் கனவு திட்டமான புல்லட் ரெயில் திட்டம் குறித்து மறுஆய்வு - முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அதிரடி உத்தரவு
Published on

மும்பை,

பிரதமர் மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று புல்லட் ரெயில். இந்த திட்டத்தை நாட்டிலேயே முதன் முறையாக மும்பை- குஜராத் மாநிலம் ஆமதாபாத் ஆகிய நகரங்களுக்கு இடையே 508 கி.மீ. தூரத்துக்கு செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. ஜப்பான் நாட்டின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் இத்திட்டத்துக்கு 2017-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியும், ஜப்பான் நாட்டு பிரதமர் ஷின்சோ அபேயும் அடிக்கல் நாட்டினர்.

தற்போது இந்த திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. மராட்டியத்தில் 108 கிராமங்கள் வழியாக செயல்படுத்தப்படும் புல்லட் ரெயில் திட்டத்துக்கு அதிகளவில் விவசாய விளை நிலங்கள் கையகப்படுத்த வேண்டியது உள்ளது. இதனால் இந்த திட்டத்துக்கு தானே மற்றும் பால்கர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

முந்தைய பாரதீய ஜனதா அரசில் அங்கம் வகித்த சிவசேனாவும் எதிர்ப்பை பதிவு செய்தது.

இந்தநிலையில், சிவசேனா தலைமையில் மராட்டியத்தில் புதிய கூட்டணி அரசு அமைந்து உள்ள நிலையில், முதல்-மந்திரி பதவி ஏற்ற சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அவர் பதவி ஏற்ற மறுநாளே முந்தைய பாரதீய ஜனதா அரசாங்கம் தீவிரம் காட்டிய ஆரேகாலனியில் மெட்ரோ ரெயில் பணிமனை அமைக்கும் திட்டத்துக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.

இந்தநிலையில், மேலும் ஒரு அதிரடி நடவடிக்கையாக புல்லட் ரெயில் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக மறுஆய்வு செய்ய அவர் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

இதுதொடர்பாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்த அரசாங்கம் சாமானிய மக்களுக்கானது. புல்லட் ரெயில் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக மறுஆய்வு செய்ய உத்தரவிட்டு உள்ளேன்.

ஆரேகாலனியில் மெட்ரோ ரெயில் பணிமனைக்கு தடை விதித்தது போல புல்லட் ரெயில் திட்டத்துக்கு தடை விதிக்கவில்லை.

மாநிலத்தின் நிதி நிலைமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். மாநில அரசுக்கு ஏறத்தாழ ரூ.5 லட்சம் கோடி கடன் உள்ளது. இருப்பினும் விவசாயிகளுக்கு கடனை தள்ளுபடி செய்வதில் அரசு உறுதியாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பிரதமர் மோடியின் கனவு திட்டமாக கருதப்படும் புல்லட் ரெயில் திட்டம் குறித்து மறு ஆய்வு செய்ய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உத்தரவிட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com