பிரதமர் பாராட்டிய ‘ஏழை மருத்துவமனை’

மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்த சகோதரியின் நினைவாக மருத்துவமனை ஒன்றை கட்டி, இலவச மருத்துவ சேவை வழங்கி வருகிறார், டாக்சி டிரைவர் சையதுல் லஷ்கர்.
பிரதமர் பாராட்டிய ‘ஏழை மருத்துவமனை’
Published on

சையதுல் லஷ்கரின் சகோதரி மாரூபா மார்பக தொற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டிருக்கிறார். அவருக்கு போதிய மருத்துவ உதவிகள் கிடைக்கவில்லை. பண பிரச்சினையும் அதற்கு காரணமாக இருந்திருக்கிறது. இறுதியில் சிகிச்சை பலனின்றி மாரூபா இறந்து போனார்.

17 வயதிலேயே சகோதரியை பிரிந்த துயரம், சையதுல் மனதை வெகுவாக பாதித்திருக்கிறது. போதிய மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் அக்கம் பக்கத்தில் வசிக்கும் எந்த சகோதரியும் இறந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில் மருத்துவமனை கட்ட தீர்மானித்திருக்கிறார்.

ஏழ்மையான குடும்ப பின்னணியை கொண்ட சையதுல், டாக்சி ஓட்டி சம்பாதிக்கும் பணத்தின் பெரும்பகுதியை மருத்துவமனை கட்டுவதற்கு ஒதுக்கி இருக்கிறார். தனது டாக்சியில் பயணிக்கும் பயணிகளிடமும் தன் விருப்பத்தை தெரிவித்து கட்டுமானத்திற்கு நிதி உதவி திரட்டி இருக்கிறார்.

ஸ்ரிஸ்டி கோஷ் என்ற இளம் பெண் தன்னுடைய முதல் மாத சம்பளத்தை வழங்கி இருக்கிறார். சையதுல் லஷ்கரின் மனைவி ஷமிமாவும் கட்டுமான நிதி திரட்டுவதற்கு உறுதுணையாக இருந்திருக்கிறார். அவர்களது கடும் உழைப்பின் பலனாக மருத்துவமனை கட்டுமான பணிகள் படிப்படியாக நடைபெற்று வந்திருக்கிறது. 12 ஆண்டு கால போராட்டத்திற்கு பிறகு முழு வடிவம் பெற்றிருக்கும் இந்த மருத்துவமனை கொல்கத்தாவில் பரூய்ப்பூர் அருகே உள்ள புன்ரி என்ற கிராமத்தில் அமைந்திருக்கிறது. எக்ஸ்ரே, இ.சி.ஜி. உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களுடன் 50 படுக்கை வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. கட்டுமானத்திற்கு முதல் மாத சம்பளத்தை வழங்கிய ஸ்ரிஸ்டி கோஷ் ரிப்பன் வெட்டி மருத்துவ சேவையை தொடங்கி வைத்திருக்கிறார்.

என் மனைவி ஷமிமா இல்லாமல் இது சாத்தியமில்லை. நான் கட்டுமான பணியை தொடங்கியபோது அக்கம், பக்கத்தினர் என்னை பைத்தியம் என்று கூறினார்கள். மருத்துவமனை கட்ட நிலம் வாங்குவதற்காக என் மனைவி அவளது நகைகளை கொடுத்து உதவினாள். கட்டுமானத்தின்போதும் பக்கபலமாக இருந்தாள் என்கிறார், சையதுல்.

இவரது முயற்சியை பிரதமர் நரேந்திர மோடியும் பாராட்டி இருக்கிறார். தனது மன் கி பாத்' வானொலி உரையில் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் உரையை கேட்டு நிறைய பேர் என்னை தொடர்பு கொண்டார்கள். பலர் உதவி அளித்தார்கள். உள்ளூர் காண்டிராக்டர்கள் கட்டுமான பணிக்காக மணல், சிமெண்ட், செங்கல் ஆகியவற்றை வழங்க முன்வந்தார்கள். சென்னையை சேர்ந்த டாக்டர் ஒருவர் என் மருத்துவமனைக்கு வந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதாக கூறினார் என்று மனம் நெகிழ்கிறார்.

சையதுல் லஷ்கரின் மருத்துவமனையில் தற்போது 8 டாக்டர்கள் பணிபுரிகிறார்கள். சுற்றுவட்டார கிராம மக்கள் ஏராளமானோர் இலவச மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். இதையடுத்து மருத்துவமனையை விரிவாக்கம் செய்யும் முயற்சியில் சையதுல் ஈடுபட்டிருக்கிறார்.

இப்போது என்னுடன் நிறைய பேர் ஒருங்கிணைந்திருக்கிறார்கள். என் கனவை நிறைவேற்று வதற்கு இன்னும் கூடுதலாக உழைக்க வேண்டும். ஒரு மருத்துவமனையுடன் என் லட்சியம் முடிவடைந்துவிடக்கூடாது. தொடர்ந்து என்னால் முடிந்த அளவு சேவை செய்ய வேண்டும் என்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com