பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்து விவசாயிகள் பயன்பெறலாம்

பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்து விவசாயிகள் பயன்பெறலாம் என கலெக்டர் கதிரவன் தெரிவித்துள்ளார்.
பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்து விவசாயிகள் பயன்பெறலாம்
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2017-18-ம் ஆண்டு ரபி பருவத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் உருளைக்கிழங்கு, வாழை மற்றும் மிளகாய் பயிரிடும் விவசாயிகள் காப்பீடு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த திட்டமானது மத்திய, மாநில அரசுகளின் மானியத்துடன் நடப்பு ஆண்டில் (2017-18) ரபி பருவத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் பயிர்களுக்கு இயற்கை இடர்பாடுகளின் மூலம் இழப்பு ஏற்படும் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்குதல், விவசாயிகளை உற்பத்தி இழப்பு ஏற்படும் அபாயத்திலிருந்து பாதுகாப்பதுடன் உணவு பாதுகாப்பிற்காக விவசாயிகளுக்கு கடன் உதவி தொடர்ந்து கிடைப்பதை உறுதிப்படுத்தி வேளாண் வளர்ச்சியை மேம்படுத்துதல், நிலையான வருமானம் கிடைக்க செய்தல் ஆகியன இத்திட்டத்தின் நோக்கமாகும்.

அறிவிப்பு வெளியிடப்பட்ட வருவாய் தொகுப்பு கிராமங்களில் உருளைக்கிழங்கு, வாழை மற்றும் மிளகாய் ஆகியவற்றை பயிரிடும் விவசாயிகள் அனைவரும் இத்திட்டத்தில் சேரலாம். பயிர்கடன் மற்றும் விவசாய கடன் பெறும் விவசாயிகள் அனைவரும் கட்டாயமாக இத்திட்டத்தில் சேர்ந்துக்கொள்ளப்படுவார்கள். பயிர்க்கடன் பெறாத விவசாயிகள் தங்கள் விருப்பத்தின் பேரில் சேரலாம்.

ரபி 2018-19 பருவத்தில் உருளைக்கிழங்கு, வாழை மற்றும் மிளகாய் பயிர்களுக்கு காப்பீட்டு கட்டணம் செலுத்துவதற்கான விவசாயிகள் சேர்க்கைக்கு பிப்ரவரி 28-ந் தேதி கடைசி நாளாகும். இதனை செயல்படுத்துவது நியு இண்டியா அஸ்யுரன்ஸ் கம்பெனி லிட் ஆகும். கடன் பெறும் மற்றும் கடன் பெறாத விவசாயிகளுக்கு ஒரே விதமான பயிர் காப்பீட்டு தொகை மற்றும் பிரிமியத்தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பிரிமியத் தொகை ஏக்கருக்கு வாழை பயிருக்கு ரூ.2,560-ம், உருளைக்கிழங்கு ரூ.1,267-ம் மற்றும் மிளகாய் பயிருக்கு ரூ.867-ம் செலுத்த வேண்டும்.

இதற்கான காப்பீட்டு கட்டணத்தை (பிரிமியம்) உரிய கால கெடுவுக்குள் தங்கள் பகுதியிலுள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மற்றும் மக்கள் கணினி மையம் ஆகியவற்றில் இத்தொகையினை செலுத்தலாம். அப்போது சிட்டா அடங்கல், ஆதார் அட்டை, வங்கி கணக்கு அட்டை ஆகியவற்றின் நகல் மற்றும் புகைப்படம் ஆகிய ஆவணங்களையும் இணைக்க வேண்டும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com