

கரூர்,
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும். அகவிலைப்படி, சரண்டர் உள்ளிட்ட பறிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் வழங்கிட வேண்டும்.
பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் பெறுவதற்கு நடவடிக்கை எடுத்திடவேண்டும்.
சாலைபணியாளர்களை பணி நீக்கம் செய்யப்பட்ட 41 மாத காலத்தை பணிக்காலமாக கருதி ஊதியம் வழங்க வேண்டும். மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு ஒருமாத சிறப்பு ஊதியம் வழங்கிட அறிவித்த அரசாணையை அமல்படுத்திட வேண்டும். அரசு துறைகளில் காலிபணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி நேற்று கரூர் தாலுகா அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் இழந்ததை மீட்டிட இருப்பதை காத்திட தொடர் மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சக்திவேல் கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார். இதில் கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினர்.
112 பேர் கைது
அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் அவர்களை கைது செய்து, வேனில் ஏற்றி சென்றனர். போராட்டத்தில் ஈடுபட்டதாக 74 பெண்கள் உள்பட 112 பேர் கைது செய்யப்பட்டனர்.