துமகூருவில் நின்ற லாரி மீது தனியார் பஸ் மோதல்: தாய்-மகள் உள்பட 7 பேர் உடல் நசுங்கி சாவு, 20 பேர் படுகாயம்

துமகூருவில் நின்ற லாரி மீது தனியார் பஸ் மோதியதில் தாய், மகள் உள்பட 7 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். மேலும் 20 பேர் படுகாயம் அடைந்தார்கள். கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பியவர்களுக்கு இந்த பரிதாபம் நேர்ந்துள்ளது.
துமகூருவில் நின்ற லாரி மீது தனியார் பஸ் மோதல்: தாய்-மகள் உள்பட 7 பேர் உடல் நசுங்கி சாவு, 20 பேர் படுகாயம்
Published on

பெங்களூரு,

துமகூரு மாவட்டம் சிரா அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது தேசிய நெடுஞ்சாலையில் ஒரு லாரி நிறுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில், திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையோரம் நின்ற லாரியின் பின்புறம் மோதியது. இதில், பஸ்சின் முன்பகுதி அப்பளம் போல நொறுங்கியது. இதனால் பஸ்சின் முன்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு சிறுமி உள்பட 7 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிர் இழந்தார்கள். மேலும் 20 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்கள்.

இதுபற்றி அறிந்ததும் சிரா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார்கள். தீயணைப்பு படைவீரர்களும் அங்கு வரவழைக்கப்பட்டார்கள். பின்னர் பஸ்சுக்குள் சிக்கி உயிருக்கு போராடியவர்களை போலீசார், தீயணைப்பு படைவீரர்கள் மீட்டு சிரா மற்றும் துமகூரு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் பலியான 7 பேரின் உடல்களும், பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

முன்னதாக விபத்து பற்றி அறிந்ததும் துமகூரு போலீஸ் சூப்பிரண்டு திவ்யா கோபிநாத் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். அப்போது பலியானவர்களின் பெயர் சங்கர்(வயது35), அஸ்வத் நாராயணா(40), கிரிஜம்மா(56), சவிதா(21), ரத்தினம்மா(38), சுமலதா(26), இவரது மகள் அனுஷா(7) ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்கள் அனைவரும் சிரா புறநகர் மற்றும் பட்டநாயக்கனஹள்ளி கிராமங்களை சேர்ந்தவர்கள் ஆவார்கள். அந்த கிராமங்களை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் சிவமொக்கா மாவட்டம் சிக்கந்தூரில் உள்ள சவுடேஷ்வரி அம்மன் கோவிலுக்கு சென்றிருந்தார்கள்.

கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு சிராவுக்கு திரும்பிய போது விபத்தில் சிக்கி பலியாகி விட்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. சாலையோரம் லாரி நிற்பதை பஸ் டிரைவர் கவனிக்காத காரணத்தால் விபத்து நடந்தது தெரியவந்துள்ளது. இதற்கிடையில், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் சாவு எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று அஞ்சப்படுகிறது. இதுகுறித்து சிரா போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் 7 பேர் பலியான சம்பவம் துமகூருவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com