விழுப்புரம் மாவட்டத்தில் 60 சதவீத பயணிகளுடன் இயங்கிய தனியார் பஸ்கள்

விழுப்புரம் மாவட்டத்தில் 60 சதவீத பயணிகளுடன் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன.
விழுப்புரம் மாவட்டத்தில் 60 சதவீத பயணிகளுடன் இயங்கிய தனியார் பஸ்கள்
Published on

விழுப்புரம்,

கொரோனா ஊரடங்கால் பொது போக்குவரத்து அனைத்தும் கடந்த சில மாதங்களாக முடக்கப்பட்டது. 5-ம் கட்டமாக இம்மாதம் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதோடு பொது போக்குவரத்தில் சில தளர்வுகள் கொண்டு வரப்பட்டு தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் கடந்த 1-ந் தேதி முதல் அரசு பஸ் போக்குவரத்து தொடங்கியது.

அதேபோல் மேற்கண்ட 4 மாவட்டங்களை தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் தனியார் பஸ்களை இயக்குவது குறித்து அதன் உரிமையாளர்கள் சங்கத்தினர் நேற்று முன்தினம் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி ஜூன் 10-ந் தேதி முதல் தனியார் பஸ்களை இயக்குவது என முடிவு செய்தனர்.

அதன்படி 2 மாதங்களுக்கு பிறகு நேற்று முதல் தனியார் பஸ் போக்குவரத்து தொடங்கியது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்திலும் நேற்று முதல் தனியார் பஸ்கள் ஓடத்தொடங்கின. மாவட்டத்தில் சுமார் 200 தனியார் பஸ்கள் உள்ள நிலையில் முதல்கட்டமாக 120 பஸ்கள் வரை இயக்கப்பட்டன.

மேலும் அரசு விதிமுறைகளின்படி முக கவசம் அணிந்து வந்த பயணிகள் மட்டுமே பஸ்சில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பஸ்சில் பயணிகள் ஏறுவதற்கு முன்பாக அவர்களுக்கு கண்டக்டர்கள், சானிடைசர் திரவம் கொடுத்தனர். அதன் மூலம் ஒவ்வொரு பயணியும் தங்கள் கைகளை நன்கு சுத்தமாக கழுவிய பிறகே பஸ்சில் ஏறினர். டிரைவர், கண்டக்டர்களும் முக கவசம், கையுறை அணிந்தபடி பணியில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டத்தின் அனைத்து வழித்தடங்களிலும் மற்றும் கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாசலம், நெய்வேலி, கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், திருவண்ணாமலை, வேட்டவலம், ஆரணி, வேலூர், சேத்பட் உள்ளிட்ட வெளியூர்களுக்கும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன.

இந்த பஸ்களில் அரசு விதிமுறையின்படி 60 சதவீத பயணிகளை மட்டுமே ஏற்றிச்செல்ல வேண்டும் என்பதால் ஒவ்வொரு பஸ்சிலும் 3 பேர் அமரக்கூடிய இருக்கையில் 2 பேரும், 2 பேர் அமரக்கூடிய இருக்கையில் ஒருவரும் அமர்ந்து சமூக இடைவெளியை பின்பற்றி பயணம் செய்தனர். இருப்பினும் கொரோனா அச்சம் காரணமாக பெரும்பாலான பஸ்களில் பயணிகள் கூட்டமின்றி மிகவும் குறைந்த பயணிகளோடு பஸ்கள் இயக்கப்பட்டன.அதுமட்டுமின்றி ஒவ்வொரு நடையின்போதும் கிருமி நாசினி தெளித்து பஸ்களை சுத்தம் செய்த பிறகே இயக்கினர்.

மேலும் பக்கத்து மாநிலமான புதுச்சேரி மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோய் தொற்று அதிகமாக பரவி வருவதால் அம்மாநிலத்திற்குள் பிற மாநில பஸ்கள் உள்ளே வருவதற்கு அங்குள்ள அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளதால் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து புதுச்சேரிக்கு தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. மாவட்ட எல்லை வரை சென்று திரும்பியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com