வைகை ஆற்றில் தனியார் உறைகிணற்றை அகற்றவேண்டும் - கலெக்டர் உத்தரவு

வைகை ஆற்றில் தனியார் உறைகிணற்றை அகற்றவேண்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
வைகை ஆற்றில் தனியார் உறைகிணற்றை அகற்றவேண்டும் - கலெக்டர் உத்தரவு
Published on

தேனி,

தேனி அருகே பள்ளப்பட்டி கிராமத்தில் வைகை ஆற்றுக்குள் தனியார் தோட்டத்துக்காக உறைகிணறு அமைக்கப்பட்டு உள்ளது. இதுபோல் பல இடங்களில் ஆற்றுக்குள் ஆழ்த்துளை கிணறு அமைத்து பலர் தண்ணீரை திருட்டுத்தனமாக எடுத்து பயன்படுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு பல முறை விவசாயிகள் தரப்பில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில், பள்ளப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் சிலர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். அங்கு நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில், கலெக்டர் பல்லவி பல்தேவிடம் விவசாயிகள் ஒரு புகார் மனு அளித்தனர்.

அந்த மனுவில், பள்ளப்பட்டியில் வைகை ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகிறோம். இதுதொடர்பாக அளித்த மனுவின் பேரில், தடுப்பணை கட்டுவதற்கு மதுரையில் இருந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் வந்து ஆய்வு செய்து சென்றுள்ளனர். இந்நிலையில் இப்பகுதியில் ஆற்றுக்குள் தனியார் தோட்டத்துக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்காக எவ்வித அனுமதியும் பெறாமல் உறைகிணறு அமைக்கப்பட்டு உள்ளது. எனவே, உறைகிணற்றை அகற்ற வேண்டும் என்று கூறியிருந்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் இதுதொடர்பாக கூட்டத்துக்கு வந்து இருந்த பொதுப்பணித்துறை அலுவலர் ஒருவரிடம் விசாரணை நடத்தினார். ஆற்றுக்குள் உறைகிணறு அமைக்கும் வரை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏன் கள ஆய்வு மேற்கொண்டு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை? என்று கலெக்டர் விளக்கம் கேட்டார். மேலும், உடனே அந்த உறைகிணற்றை அகற்ற வேண்டும். உறைகிணறு அமைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தாமதம் செய்தால் சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது துறைவாரியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரித்தார்.

இதையடுத்து 2 நாட்களுக்குள் போலீஸ் பாதுகாப்புடன் அந்த உறைகிணறு அகற்றப்படும் என்று பொதுப்பணித்துறை அலுவலர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com