தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர 4,000 பேர் விண்ணப்பம்

தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர 4,000 பேர் விண்ணப்பித்து உள்ளனர். கூடுதலாக விண்ணப்பம் பெறப்பட்ட பள்ளிகளுக்கு, குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை உறுதி செய்யப்படும்.
தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர 4,000 பேர் விண்ணப்பம்
Published on

கோவை,

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி தனியார் சுயநிதி பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் (எல்.கே.ஜி., 1-ம் வகுப்பு) 25 சதவீத இடஒதுக்கீட்டில், வாய்ப்பு மறுக்கப்பட்ட நலிவடைந்த பிரிவை சேர்ந்த குழந்தைகள் சேர்க்கப்பட வேண்டும். இதன்படி வருகிற 2018-19-ம் கல்வி ஆண்டில் 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் எல்.கே.ஜி. மற்றும் 1-ம் வகுப்பு மாணவர்களுக்கான சேர்க்கை இணையதளம் மூலம் கடந்த மாதம் 20-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை நடைபெற்றது. இதில் மொத்தம் 4,000-க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். இது குறித்து கோவை மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது.

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25 சதவீத இடஒதுக்கீட்டில் வரும் கல்வி ஆண்டில் எல்.கே.ஜி. மற்றும் 1-ம் வகுப்புக்கு மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. கோவையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் அலுவலகம், தொ டக்க கல்வி அலுவலர் அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம், அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலகம், அரசு இ-சேவை மையங் களுக்கு சென்று இணையதளம் மூலம் மாணவர்கள் விண்ணப்பித்து வந்தனர்.

இதில் வீட்டை சுற்றி 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளைதேர்வு செய்ய வேண்டும். ஒரு மாணவர் அதிகபட்சமாக 5 பள்ளிகளை தேர்வு செய்யலாம். இதற்காக இணையதளத்தில் வசதி செய்யப்பட்டு இருந்தது. இதுகுறித்து பெற்றோருக்கு அறிவுறுத்தும் வகையில் அந்தந்த பள்ளிகளின் நுழைவு வாயிலில் நோட்டீசும் ஒட்டப்பட்டு இருந்தது.

தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் சேர 4,000-க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். இதில், பள்ளி வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங் களில் விண்ணப்பித்த தகுதியானோருக்கு, சேர்க்கை உறுதி செய்யப்பட்டு, மாணவர் பட்டியல் உரிய பள்ளிகளுக்கு அனுப்பப்படும். நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட கூடுதலாக விண்ணப்பம் பெறப்பட்ட பள்ளிகளுக்கு, குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை உறுதி செய்யப்படும்.

மேலும் ஒவ்வொரு பிரிவுக்கும் 5 மாணவர்கள் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்படுவர். இணையதளம் மூலமாக விண்ணப்பித்த, தகுதியான நபர்கள், உரிய சான்றிதழ் சமர்ப்பிக்காவிட்டாலும், குலுக்கல் முறையில் பெயர் சேர்க்கப்படும். இதில் மாணவர்களை தேர்வு செய்யும் பணி இந்த வார இறுதிக்குள் நடைபெறும். இந்த பணியில், கல்வித்துறை மட்டுமல்லாமல், கலெக்டர் உத்தரவுப்படி வருவாய் துறை அலுவலர்களும் பங்கேற்பார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com