பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆவதில் சிக்கல்? - புதிய தகவல்

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆவதில் சிக்கல்? - புதிய தகவல்
Published on

பெங்களூரு,

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் மூவரும் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி அந்த சிறையில் அடைக்கப்பட்டனர். சசிகலாவுக்கு ரூ.10 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அந்த அபராதத்தொகை இதுவரை செலுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. அபராதத்தை செலுத்தாவிட்டால் மேலும் ஓராண்டு அவர் சிறையில் இருக்க வேண்டும்.

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா 1997-ம் ஆண்டு 13 நாட்கள் சென்னை சிறையிலும், கடந்த 2014-ம் ஆண்டு 24 நாட்கள் பெங்களூரு பரப்பனஅக்ரஹார சிறையிலும் இருந்தார். இரண்டையும் சேர்த்தால், 37 நாட்கள் ஆகிறது. அவரது தண்டனை காலத்தில் இந்த 37 நாட்கள் கழிக்கப்பட்டுவிடும்.

மேலும் ஆண்டுக்கு சுமார் ஒரு மாதம் தண்டணை கைதிகளுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது.

அந்த விடுமுறை, தண்டணை காலத்தில் கழிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதன்படி பார்த்தால் சசிகலாவின் 4 ஆண்டு சிறை தண்டணைக்கு, 4 மாதங்கள் கழிக்கப்படும். இந்த 4 மாத விடுமுறை, ஏற்கனவே சுமார் ஒரு மாதம் சிறையில் இருந்தது என 5 மாதங்கள் தண்டனை காலத்தில் கழிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. இது மட்டுமின்றி, சிறை சூப்பிரண்டு, தனக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி தண்டனை கைதிகளுக்கு அதிகபட்சமாக 2 மாதங்கள் வரை தண்டனை காலத்தை குறைக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஒரு வேளை சசிகலாவுக்கு சிறை சூப்பிரண்டு இந்த சலுகையை வழங்காவிட்டால், சசிகலா அக்டோபர் மாதம் தான் பெங்களூரு சிறையில் இருந்து வெளியே வர வாய்ப்பு உள்ளது. சிறை சூப்பிரண்டு சலுகையை வழங்கினால், பா.ஜனதா பிரமுகர் வெளியிட்ட கருத்துப்படி அவர் ஆகஸ்டு 14-ந் தேதி விடுதலையாக வாய்ப்பு இருக்கிறது. இந்த கணக்குகளின்படி தான் சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆவார் என்று இப்போதே தகவல்கள் பரவி வருகின்றன.

ஆனால் நன்னடத்தை விதிகள் சசிகலாவுக்கு பொருந்தாது என்று சிறைத்துறை உயர் அதிகாரியாக இருந்த மேக்ரிக் கூறியுள்ளார். பொருளாதார குற்றம் இழைத்தவர்களுக்கு நன்னடத்தை விதிகள் பொருந்தாது என்று சிறைத்துறை விதிமுறைகள் கூறுகின்றன. அதன்படி பார்த்தால், சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆவதில் சிக்கல் இருப்பதாக சொல்லப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com