பெருகும் மக்கள் தொகையால் தலைவலி

இந்தியாவில் மக்கள் தொகை பெருக்கம் பல்வேறு கவலைகளை தோற்றுவித்து உள்ளது. தற்போது நமது நாட்டின் மக்கள் தொகை 134 கோடியே 80 லட்சம். இது உலக மக்கள் தொகையில் (760 கோடி) 17.74 சதவீதம். அண்டை நாடான சீனாவின் மக்கள் தொகை 141 கோடி.
பெருகும் மக்கள் தொகையால் தலைவலி
Published on

1969-ம் ஆண்டு நமது நாட்டின் மக்கள் தொகை 54 கோடியே 15 லட்சமாக இருந்தது. இதே காலகட்டத்தில் சீனாவின் மக்கள் தொகை 79 கோடியே 60 லட்சம். ஆனால் சீனாவுடன் தற்பொழுது ஒப்பிடுகையில் இந்திய மக்கள் தொகை 2 மடங்கிற்கும் மேலாக பெருகி இருக்கிறது.இறப்பு விகிதம் குறைந்து பிறப்பு விகிதம் அதிகமாகி வருவதால் மக்கள் தொகை விர்ரென்று உயர்ந்து வருகிறது. நாட்டில் ஒரு வினாடி நேரத்தில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 34. இறப்பு 10. 1979-ஆம் அண்டு சீனாவில் ஒரு குழந்தை திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் பிறப்பு விகிதம் கணிசமாக குறைந்து விட்டது. அங்கு தற்பொழுது வினாடிக்கு 11 குழந்தைகள்தான் பிறக்கின்றன.

நிலப்பரப்பில் இந்தியாவை விட சீனா மும்மடங்கு பெரியது (இந்தியாவின் நிலப்பரப்பு 3.287 மில்லியன் சதுர கி.மீ. சீனா 9.597 மில்லியன் சதுர கி.மீ.) என்பதால் மக்கள் அடர்த்தியாக வசிக்கும் சூழ்நிலை அங்கு ஏற்பட வாய்ப்பில்லை. நமது நாடோ பரப்பளவில் சிறியது. 2050-ல் இந்திய மக்கள் தொகை சீனாவை மிஞ்சி 160 கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. இதனால் உணவு, குடிநீர், வசிப்பிடம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் அப்பொழுது பெரும் தலைவலியை ஏற்படுத்தலாம்.குறிப்பாக உணவு உற்பத்தியில் நாம் தன்னிறைவு நிலையை எட்டினாலும் கூட, மக்கள் தொகை பெருக்கத்தால் ஒவ்வொரு ஆண்டும் அதற்கான இலக்கு அதிகமாகி கொண்டே போகும். உணவு பொருட்களை அதிகளவில் இறக்குமதி செய்யவேண்டிய கட்டாயத்திற்கும் தள்ளப்படுவோம்.

2060-ல் உலக மக்கள் தொகை ஆயிரம் கோடியாக உயருகின்றபொழுது ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளின் மக்கள் உணவுக்காகவும், குடிநீருக்காகவும் பெரும் அவலத்தை சந்திக்கும் நிலைமை ஏற்படும் என்று ஐ.நா. எச்சரித்துள்ளது. இது இந்தியாவுக்கும் பொருந்தும். ஆகவே மத்திய, மாநில அரசுகள் மக்கள் தொகையை கட்டுப்படுத்த தீவிர விழிப்புணர்வை ஏற்படுத்திடவேண்டும்.

-மாயவன்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com