போலி ஆவணம் தயாரித்து 300 ஏக்கர் விவசாய நிலத்தை அபகரிக்க முயற்சி

போலி ஆவணம் தயாரித்து 300 ஏக்கர் விவசாய நிலத்தை அபகரிக்க முயற்சி செய்வதாக 3 கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் புகார் செய்தனர்.
போலி ஆவணம் தயாரித்து 300 ஏக்கர் விவசாய நிலத்தை அபகரிக்க முயற்சி
Published on

திண்டுக்கல்,

வடமதுரை ஒன்றியம் சுக்காம்பட்டி ஊராட்சியில் எஸ்.பூசாரிபட்டி, மாமரத்துப்பட்டி, புதுப்பட்டி ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்தவர்களின் விவசாய நிலங்களை, சிலர் போலி ஆவணம் தயாரித்து அபகரிக்க முயற்சி செய்வதாக கிராம மக்கள் குற்றம்சாட்டினர்.

இதுதொடர்பாக நேற்று முன்தினம் வடமதுரை சார்பதிவாளர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர். இந்த நிலையில் நேற்று அந்த 3 கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும், மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் தங்களுடைய நிலத்தை சிலர் அபகரிக்க முயற்சிப்பதாக கூறி மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், புதுப்பட்டி, மாமரத்துப்பட்டி, எஸ்.பூசாரிபட்டி ஆகிய கிராமங்களில் 500 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில் எங்களுக்கு சொந்தமான சுமார் 300 ஏக்கர் நிலங்களுக்கு 3 பேர் பவர் ஏஜெண்டுகள் என்று கூறி கடந்த 2010-ம் ஆண்டு வடமதுரை சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்துள்ளனர். பின்னர் எங்களுடைய நிலங்களை 8 பேர் அவர்களுடைய பெயரில் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பத்திரப்பதிவை ரத்து செய்ய வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.

அதுபற்றி கிராம மக்கள் கூறுகையில், நாங்கள் பல தலைமுறைகளாக விவசாயம் செய்து வருகிறோம். அந்த நிலத்துக்கான பட்டா எங்களின் பெயரில் உள்ளது. ஆனால், எங்களுடைய நிலத்துக்கு பவர் ஏஜெண்டுகள் என போலியாக ஆவணம் தயாரித்து, பிறருக்கு விற்பனை செய்ததாக மோசடி செய்துள்ளனர். இதன் மூலம் எங்களின் நிலத்தை அபகரிக்க முயற்சி செய்கின்றனர். இந்த பத்திரப்பதிவை ரத்து செய்ய வேண்டும், என்றனர்.

இதேபோல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், வேடசந்தூர் தாலுகா அலுவலகத்திலும் மனு கொடுத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com