உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்ய செயல் திட்டம் வகுத்து சமர்ப்பிக்க வேண்டும் - அலுவலர்களுக்கு, கலெக்டர் அறிவுரை

உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்ய செயல் திட்டம் வகுத்து சமர்ப்பிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு, கலெக்டர் அறிவுரை கூறினார்.
உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்ய செயல் திட்டம் வகுத்து சமர்ப்பிக்க வேண்டும் - அலுவலர்களுக்கு, கலெக்டர் அறிவுரை
Published on

ஊட்டி,

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் வளாக அரங்கில் ஏற்றுமதி மேம்பாட்டு குழுவின் முதல் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் மற்றும் உற்பத்தி செய்யப்படும் தேயிலைத்தூள், காபி, மிளகு, வர்க்கி, கேரட், அயல்நாட்டு காய்கறிகள் மற்றும் தோடர் இன பெண்கள் உற்பத்தி செய்யும் சால்வை போன்றவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய பிரகாசமான வாய்ப்புகள் உள்ளது என்று கண்டறியப்பட்டு இருக்கிறது.

எனவே இந்த பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில் முனைவோர்கள், விவசாயிகள் மற்றும் கைவினை கலைஞர்களை ஏற்றுமதியாளர்களாக உருவாக்க வேண்டும். அவர்களுக்கு தேவைப்படும் பயிற்சிகள், ஏற்றுமதி செய்வது தொடர்பான வழிமுறைகள், பதிவுகள் குறித்த நடைமுறைகளை பின்பற்றுவது குறித்து தெரியப்படுத்த வேண்டும். நமது மாவட்டத்தில் இருந்து ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கான செயல் திட்டம் வகுத்து சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் தயாரித்து எதிர்வரும் கூட்டங்களில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக கூட்டத்தில் நீலகிரி மாவட்டத்தை ஒரு முன்னணி ஏற்றுமதி குவியமாக மாற்ற என்னென்ன முயற்சிகளை குழு உறுப்பினர்கள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

இதில் காணொலி காட்சி மூலம் நீலகிரி மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சண்முகசிவா, வெளிநாட்டு வர்த்தக உதவி இயக்குனர் விஜயலட்சுமி, மண்டல அலுவலர்கள் ரவீந்திரா, ராமச்சந்திரன், தேயிலை வாரியம் ரமேஷ், காப்பி வாரிய துணை இயக்குனர் கருத்தமணி, உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் தங்க விக்னேஷ் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com