காவலர் தேர்வுக்கு தடை விதிப்பதா? சிவா எம்.எல்.ஏ. கண்டனம்

காவலர் தேர்வுக்கு தடை விதித்ததற்கு தெற்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. கண்டனம் தெரிவித்துள்ளார். புதுவை தெற்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காவலர் தேர்வுக்கு தடை விதிப்பதா? சிவா எம்.எல்.ஏ. கண்டனம்
Published on

புதுச்சேரி,

புதுவையில் காங்கிரஸ் அரசு பொறுப்பேற்றதில் இருந்து கவர்னர் கிரண்பெடி அரசு நிர்வாகத்தில் தலையிட்டு பல்வேறு தொந்தரவுகளை அளித்து வருகிறார். தற்போது காவலர் தேர்வுக்கான உடல் தகுதி தேர்வு வருகிற 4-ந்தேதி நடத்தப்படும் என அரசு அறிவித்தது. இதையடுத்து இளைஞர்கள் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்தநிலையில் புதுவை அரசுக்கு நல்ல பெயர் கிடைக்கக் கூடாது. இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்றுவிடக் கூடாது, காவலர் சுமை குறைந்து மக்களுக்கு பாதுகாப்பு கிடைக்கக் கூடாது என்று திட்டமிட்ட ஒரு சதிக்கும்பல் காவலர் தேர்வு நடைபெறுவதற்கு முன்பே மோசடி நடக்கும். தேர்வுக்கான ஓடுபாதை சரியில்லை போன்ற தேவையற்ற புகார்களை கவர்னருக்கு தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து கவர்னரும் தடை ஏற்படுத்தி உள்ளார். இது கண்டிக்கத்தக்கது. தொடர்ந்து அரசு நிர்வாகத்தில் தலையிட்டு மக்களுக்கு கிடைக்கும் திட்டங்களை கவர்னர் தடுத்து வருகிறார். முறைகேடு நடைபெறாத வகையில் தேர்வு செய்வதற்கான ஆலோசனையை அரசுக்கு அவர் தெரிவிக்க வேண்டுமே தவிர இதுபோல் தடுப்பது உகந்ததல்ல.

மக்களும், இளைஞர்களும் பாதித்தால் பாதிக்கட்டும் என்று செயல்பட்டால் அது மிகவும் மோசமானதாகும். கவர்னரின் இந்த திடீர் தடை உத்தரவால் பயிற்சி பெற்று வந்த இளைஞர்கள் மிகவும் துயரத்துக்கு ஆளாகியுள்ளனர். எனவே கவர்னர் கிரண்பெடி தனது முடிவினை கைவிட்டு அரசு அறிவித்தபடி 4-ந்தேதி காவலர் தேர்வை நடத்த செய்யவேண்டும்.

அதேபோல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவபடிப்பில் 10 சதவீதம் உள்ஒதுக்கீடு கிடைக்க அரசு அனுப்பிய கோப்பிற்கும் உடனடியாக ஒப்புதல் வழங்கவேண்டும். இதை கவர்னர் கிரண்பெடி செய்ய மறுத்தால் முதல்-அமைச்சர் நாராயணசாமி உடனடியாக கவர்னருக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து இந்த விவகாரத்தில் வெற்றி காண வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com