கொரோனா அதிகரிப்பால் தரிசனத்துக்கு தடை: முருகன் கோவில்களில் களையிழந்த ஆடிக்கிருத்திகை விழா

கொரோனா அதிகரிப்பால் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டதால் முருகன் கோவில்களில் ஆடிக்கிருத்திகை விழா களையிழந்து காணப்பட்டது.
கொரோனா அதிகரிப்பால் தரிசனத்துக்கு தடை: முருகன் கோவில்களில் களையிழந்த ஆடிக்கிருத்திகை விழா
Published on

சென்னை,

முருகன் கோவில்களில் ஆடிக்கிருத்திகை விழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த நாளில் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் துன்பங்கள் அகலும், செல்வம் பெருகும், நோய்கள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.

எனவே ஆடிக்கிருத்திகை அன்று திருச்செந்தூர், திருத்தணி, பழனி உள்பட முருக பெருமானின் அறுபடைவீடுகளான 6 திருத்தலங்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். பால்குடம், பன்னீர் காவடி, புஷ்ப காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் தங்களது நேர்த்திகடனை செலுத்தி முருக கடவுளை வழிபடுவார்கள்.

பக்தர்கள் தரிசனத்துக்கு தடை

தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளதால் தமிழக அரசு கட்டுப்பாடுகளை மீண்டும் கடுமையாக்கி வருகிறது. அந்தவகையில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில் ஆடிக்கிருத்திகை விழாவில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டது. இதனால் முருகன் கோவில்களில் ஆடிக்கிருத்திகை விழா நேற்று களையிழந்து காணப்பட்டது.

சென்னை வடபழனி முருகன் கோவிலில் அனைத்து நுழைவுவாயில்களும் மூடப்பட்டிருந்தது. இதனால் பக்தர்கள் கோவில் வாசலில் சூடம்-விளக்கேற்றியும் வழிபட்டனர். கோபுரத்தை கையெடுத்து வணங்கி ஓம் முருகா... கந்தனுக்கு அரோகரா... என்று பக்தி முழக்கத்துடன் மனமுருக வேண்டி சென்றனர்.

கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை என்றாலும் 3 கால பூஜைகள் வழக்கம் போல் நடத்தன. மேலும் ஆடிக்கிருத்திகையையொட்டி சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெற்றன.

வடபழனி கோவில் நிர்வாகத்தின் முடிகாணிக்கை கூடம் மூடப்பட்டிருந்ததால் வெளியே சிலர் மொட்டை அடிக்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்களிடம் பக்தர்கள் சிலர் முடிகாணிக்கை செலுத்தி சென்றனர்.

வியாபாரிகள் கவலை

ஆடிக்கிருத்திகை வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டதால் கோவிலை சுற்றி கடை வைத்துள்ள வியாபாரிகள் சோகத்துடன் காணப்பட்டனர். பக்தர்கள் வருகையையொட்டிதான் எங்கள் வாழ்வாதாரம் இருக்கிறது. தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால் பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் வியாபாரம் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்று அவர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.

சென்னையில் கந்தக்கோட்டம் உள்பட பெரும்பாலான முருகன் கோவில்களிலும் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதே நேரத்தில் சிறிய முருகன் கோவில்களில் ஆடிக்கிருத்திகை வழிபாட்டில் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com