ராமநாதபுரம்-தூத்துக்குடி இடையே எரிவாயு குழாய் அமைக்கும் திட்ட அறிவிப்பாணைக்கு தடை நீக்கம் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

ராமநாதபுரம்- தூத்துக்குடி இடையே எரிவாயு குழாய் அமைக்கும் திட்ட அறிவிப்பாணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம்-தூத்துக்குடி இடையே எரிவாயு குழாய் அமைக்கும் திட்ட அறிவிப்பாணைக்கு தடை நீக்கம் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
Published on

மதுரை,

தூத்துக்குடியைச் சேர்ந்த செல்லம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தூத்துக்குடியில் உள்ள ஸ்பிக், ஸ்டெர்லைட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ராமநாதபுரத்தில் இருந்து குழாய் மூலம் எரிவாயு வினியோகம் செய்யும் திட்டத்தை இந்தியன் ஆயில் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் ஆறுகள், கால்வாய்கள், சாலைகள், வனம், பாதுகாக்கப்பட்ட சுற்றுச்சூழல் பகுதிகள், சக்கரைக்கோட்டை பறவைகள் சரணாலயம், மன்னார் வளைகுடா பகுதியில் பவளப்பாறைகள் வழியாக தூத்துக்குடிக்கு எரிவாயு குழாய் கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக விளை நிலங்களை கையகப்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கு எதிராக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தோம். அதனை விசாரித்த ஐகோர்ட்டு, விவசாய நிலங்களை கையகப்படுத்த இடைக்கால தடை விதித்தது. இந்த திட்டத்திற்கு முன்கூட்டியே சுற்றுச்சூழல் அனுமதி பெற தேவையில்லை என்று மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்தை செயல்படுத்தினால் பறவைகள் சரணாலயம், பவளப்பாறைகளுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே இந்த திட்டத்துக்கு சுற்றுச் சூழல் துறை அனுமதி தேவையில்லை என்று மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

ஏற்கனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசின் அறிவிப்பாணைக்கு இடைக்கால தடை விதித்தும், பெட்ரோலியத்துறை அதிகாரிகள் பதில் அளிக்கவும் ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

முடிவில், ராமநாதபுரம்- தூத்துக்குடி இடையிலான எரிவாயு குழாய் அமைக்கும் அறிவிப்பாணைக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கிக்கொள்வதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் இதுகுறித்து சுற்றுச்சூழல்துறை, பெட்ரோலியத் துறையினர் பதில் அளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com