மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்: பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் காங்கிரஸ் வலியுறுத்தல்

பதவி உயர்வில் அனைத்து தரப்பினருக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்: பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் காங்கிரஸ் வலியுறுத்தல்
Published on

புதுச்சேரி,

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் உரிமைகளையும், இடஒதுக்கீட்டையும் பறிக்க துடிக்கும் மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாரதீய ஜனதா அரசை கண்டித்து புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டி சார்பில் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு புதுவை மாநில காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் தலைமை தாங்கினார். இதில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் சஞ்சய்தத், முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் ஷாஜகான், வைத்திலிங்கம் எம்.பி., ஜான்குமார் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்துகொண்டு மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா அரசு நாட்டில் வன்முறையை கட்டவிழ்த்து விடும் வகையில் மதத்தின் பெயரால் பிரிவினையை ஏற்படுத்தி வருகிறது. வேலை வாய்ப்பு இல்லை, தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன. மக்கள் மத்தியில் பணப்புழக்கம் இல்லை. இந்திய பொருளாதாரத்தை சீர்குலைத்துவிட்டு மக்கள் கேள்விகள் கேட்டுவிடக்கூடாது என அவர்களை திசைத்திருப்புவதற்காக குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது வடமாநிலங்களில் பல்வேறு வன்முறை தாக்குதல் நடந்துள்ளது.

கடந்த 14-ந் தேதி சென்னை வண்ணாரப்பேட்டையில் முஸ்லிம்கள் பங்கேற்ற குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் காவல்துறையை ஏவிவிட்டு அவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. குடியுரிமை சட்டத்தால் நாடே பற்றி எரிகிறது. படிப்படியாக தமிழகத்தில் வன்முறை புகுந்துவிட்டது. புதுச்சேரியில் அனைவரும் சகோதரர்களாக வாழ்ந்து வருகிறோம். இங்கு எந்த வகையிலும் கலவரம் ஏற்பட விடமாட்டோம். பதவி உயர்வில் இட ஒதுக்கீடு அனைத்து தரப்பினருக்கும் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில, மாவட்ட, வட்டார தலைவர்கள், நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com