இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து பாரதீய ஜனதா கட்சி சார்பில் ஊர்வலம்

இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து பாரதீய ஜனதா கட்சி சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலம் நடைபெற்றது.
இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து பாரதீய ஜனதா கட்சி சார்பில் ஊர்வலம்
Published on

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில், இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலம் திருப்பத்தூர் பஸ் நிலையம் அருகில் இருந்து புறப்பட்டது. அதைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலகம் எதிரில் பொதுக்கூட்டம் நடந்தது.

திருப்பத்தூர் மாவட்ட தலைவர் சி.வாசுதேவன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் வி.அன்பழகன் வரவேற்றார். மாவட்ட பொது செயலாளர்கள் ரா.கண்ணன், பா.ஈஸ்வர், எம்.தண்டாயுதபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக மாநில செய்தி தொடர்பாளர் நாராயணன், திருப்பதி, கோட்ட பொறுப்பாளர் ரா.பிரகாஷ், முன்னாள் மாவட்ட தலைவர் கோ.வெங்கடேசன் ஆகியோர் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து பேசினார்கள்.

கூட்டத்தில் இந்திய குடியுரிமை சட்டம் அனைவருக்கும் பொதுவானது, முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல, யாராவது ஒரு இந்திய குடிமகன் பாதிக்கப்படுவதாக நிரூபித்தால் இந்த இடத்திலேயே திருப்பத்தூர் மாவட்ட பாரதீய ஜனதா கட்சி 5 பவுன் நகை தருவதாக கூறினார்கள்.

மாநில எஸ்.டி. பிரிவு துணைத்தலைவர் ஐ.வி.எல்.பள்ளி கோவிந்தராஜ். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் எம்.திருநாவுக்கரசு, டாக்டர் சர்குணபிரபு உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் நகர தலைவர் டி.சி.அருள்மொழி நன்றி கூறினார்.

பின்னர் பாரதீய ஜனதா கட்சியினர் மாவட்ட கலெக்டர் சிவன்அருளை சந்தித்து இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து கடிதத்தை வழங்கினார்கள்.

ஊர்வலத்தையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். கிருஷ்ணகிரிமெயின் ரோடு முழுவதும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, மாற்றுப் பாதையில் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.

ஊர்வலத்தின்போது வழிநெடுகிலும் பாரத் மாதா கி ஜே என்ற கோஷத்துடன் சி.ஏ.ஏ.வை ஆதரித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.

கூட்டத்தில் தேசிய பாடல்கள் இசைக்கப்பட்டது. முடிவில் தேசிய கீதம் பாடினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com