

திருவிடைமருதூர்,
கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் நாகநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு எதிரில் அரசுக்கு சொந்தமான மதுக்கடை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை இயங்கியது. இந்தநிலையில் பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக அந்த கடை அங்கிருந்து அகற்றப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் அதே இடத்தில் மதுக்கடை திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்றது. இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் மதுக்கடையை மூடக்கோரி நேற்று கடை முன்பு கூடினர்.
கடை முன்பு ஏராளமான பொதுமக்கள் கூடியதை பார்த்த விற்பனையாளர் கடையை பூட்டி விட்டு சென்றுவிட்டார். தொடர்ந்து பொதுமக்கள் மதுக்கடையை மூடக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் மணி நேரத்துக்கு மேல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த நாச்சியார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயகவுரி தலைமையிலான போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் இந்த மதுக்கடை விரைவில் மூடப்படும் என தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.