

நெல்லை,
புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் பெருமாள் வழிபாட்டுக்கு உகந்ததாகும். இந்த நிலையில் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையான நேற்று நெல்லை பகுதியில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது.
நெல்லை சந்திப்பு வரதராஜ பெருமாள் கோவிலில் பக்தர்கள் சமூக இடைவெளி விட்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்குள் நுழைந்த பக்தர்களுக்கு உடல் வெப்பநிலையை கண்டறியும் வகையில் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் கிருமி நாசினி மற்றும் சோப்பு ஆயில் மூலம் பக்தர்கள் கைகளை கழுவிய பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
நெல்லை அருகே உள்ள மேல திருவேங்கடநாதபுரம் பெருமாள் கோவிலில் சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. இங்கு ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளி விட்டு தரிசனம் செய்தனர். பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி கோவில், டவுன் கரியமாணிக்க பெருமாள் கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் நவ திருப்பதி கோவில்களுக்கு பக்தர்கள் எளிதாக சென்று வரும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து நேற்று சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் ஒரு பஸ்சில் அதிகபட்சம் 35 பக்தர்களை மட்டும் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு பயணிகள் முன்பதிவு செய்து நேற்று காலை 7 மணி அளவில் புதிய பஸ்நிலையத்திற்கு வந்தனர். அந்த பக்தர்களை ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம், நத்தம், திருப்புளியங்குடி, பெருங்குளம், இரட்டை திருப்பதி, தென்திருப்பேரை, திருக்கோளூர், ஆழ்வார் திருநகரி ஆகிய ஊர்களில் உள்ள 9 பெருமாள் கோவில்களுக்கு பக்தர்களை அழைத்துச் சென்று மீண்டும் இரவில் பக்தர்களை நெல்லை புதிய பஸ் நிலையத்தில் கொண்டுவந்துவிட்டனர். இதற்கு கட்டணமாக 500 ரூபாய் வசூலிக்கப்பட்டது.
தொடர்ந்து புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் இதேபோல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.