மது குடிக்க எதிர்ப்பு தெரிவித்ததால், இருதரப்பினர் மோதல்; 10 பேர் காயம் - கோட்டக்குப்பம் அருகே போலீஸ் குவிப்பு

கோட்டக்குப்பம் அருகே மது குடிக்க எதிர்ப்பு தெரிவித்ததால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் 10-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மது குடிக்க எதிர்ப்பு தெரிவித்ததால், இருதரப்பினர் மோதல்; 10 பேர் காயம் - கோட்டக்குப்பம் அருகே போலீஸ் குவிப்பு
Published on

கோட்டக்குப்பம்,

கோட்டக்குப்பத்தை அடுத்த பெரிய கோட்டக்குப்பம் டாக்டர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் வசந்தராஜ் (வயது 29). தீபாவளி தினத்தன்று இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது குடிக்க அங்குள்ள சுடுகாட்டு பகுதிக்கு சென்றார்.

அந்த பகுதியில் நடுக்குப்பம் மீனவர் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் தங்கள் படகுகளை நிறுத்தி இருந்ததால், அந்த பகுதிக்கு சென்று மதுகுடிக்க நடுக்குப்பம் மீனவர் நவீன்ராஜ் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் அங்கு மதுகுடிக்க வருபவர்களால் படகுகளில் வைத்துள்ள மீன்பிடி சாதனங்கள் திருடு போவதாக அவர் குற்றம் சுமத்தியதாக கூறப்படுகிறது.

அதனால் அவர்களுக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தகராறு முற்றி இரு தரப்பினருக்கும் இடையே மோதலாக மாறியது. அது பற்றி தகவல் அறிந்ததும் கோட்டக்குப்பம் போலீசார் அங்கு விரைந்து சென்று இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். மேலும் மீண்டும் தகராறு ஏற்படாமல் தடுக்க அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.

இந்த நிலையில் நேற்று மாலை இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதில் இரு தரப்பினரும் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக் கொண்டனர்.

இந்த மோதலில் இரு தரப்பையும் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். அப்போது குறைவான போலீசாரே பாதுகாப்பு பணியில் இருந்ததால் மோதலை தடுக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. அதையடுத்து மோதல் குறித்து விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் சம்பவ இடத்துக்கு அதிரடிப்படை போலீசார் அனுப்பி வைக்கப்பட்டனர். அதிரடிப்படையினர் களம் இறங்கி மோதலில் ஈடுபட்டவர்களை விரட்டி அடித்தனர். அதன் பிறகே மோதல் முடிவுக்கு வந்தது.

இந்த மோதல் தொடர்பாக இரு தரப்பினரும் தனித்தனியே கோட்டக்குப்பம் போலீசில் புகார் செய்தனர்.

இதில் நடுக்குப்பம் மீனவர் கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பெரிய கோட்டக்குப்பம் காலனியை சேர்ந்த மாயவன் (25), மோகன் (24), சரண்ராஜ் (22), மதுபாலன் (28), கதிர் (25), அஜீத்குமார் (19), மணிகண்டன் (18) ஆகிய 7 பேரை கைது செய்தனர்.

அதேபோல் பெரிய கோட்டக்குப்பம் அம்பேத்கர் நகரை சேர்ந்த வசந்த்ராஜ் கொடுத்த புகாரின்பேரில் நடுக்குப்பம் மீனவர் காலனியை சேர்ந்த ஏழுமலை (25), ஜெகன் (25), சுபாஷ் (22), வெற்றி (22), முத்து (23), பாலு (23), சரத்குமார் (27) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

தற்போது 2 கிராமங்களிலும் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் மீண்டும் மோதல் ஏற்படாமல் தடுக்க அதிரடிப்படை போலீசாரும், கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசாரும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com