இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் கலெக்டரிடம், பொதுமக்கள் மனு

இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கலெக்டர் ஷில்பாவிடம், பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் கலெக்டரிடம், பொதுமக்கள் மனு
Published on

நெல்லை,

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க நிறுவனர் தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் ராமையன்பட்டி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் கொடுத்த மனுவில் கூறிஇருப்பதாவது:-

பாளையங்கோட்டை யூனியன் ராமையன்பட்டி கிராம ஊராட்சி முதல்நிலை பெற்றது ஆகும். இங்கு 10 ஆயிரத்துக்கும் மேல் மக்கள் வசித்து வருகிறார்கள். இங்குள்ள அக்ரஹாரம், அரசு புது காலனி, சிவாஜி நகர், சைமன் நகர், போலீஸ் காலனி, செல்வ நந்தினி நகர் போன்ற பகுதிகளில் மழைக்காலத்தில் நெடுஞ்சாலையில் தண்ணீர் செல்ல வழியில்லாமல் வெள்ளம் சூழ்ந்து வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் மக்கள் வாழ வழியில்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் அன்றாட வாழ்க்கை பொதுமக்களுக்கு பெரிய பாதிப்பாக உள்ளது. எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கலந்து ஆலோசனை நடத்தி சங்கரன்கோவில் நெடுஞ்சாலை ஓரமாக வாறுகால் அமைத்து தரவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

வீரமாணிக்கபுரத்தை சேர்ந்த ஊர் பொது மக்கள், தேவேந்திர குல வேளாளர் மக்கள் சபை நிறுவனர் ராமர் பாண்டியன் தலைமையில் திரண்டு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், வீரமாணிக்கபுரம் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடு இல்லாமல், நிரந்தர வேலை வாய்ப்பு கிடைக்காமல் வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்ந்து வருகிறோம்.

இங்கு அரசுக்கு சொந்தமான 96 சென்ட் புறம்போக்கு நிலம் உள்ளது. அங்கு வீடு இல்லாத மக்களுக்கு வீட்டுமனை அல்லது தொகுப்பு வீடு கட்டித்தர வேண்டும் என்று கூறிஉள்ளனர்.

மேலக்கரையை சேர்ந்த ஊர்பொதுமக்கள் நாட்டாமை தவிடன் தலைமையில் கலெக்டரிடம் கொடுத்த மனுவில்,

கடந்த 17-ந்தேதி எங்கள் ஊரில் ஊர் பொதுமக்கள் சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. அப்போது 2 தரப்புக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக தச்சநல்லூர் போலீஸ் நிலையத்தில் இருதரப்பு சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதையொட்டி 2 தரப்பினர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த பிரச்சினை தொடர்பாக ஊர் பெரியவர்கள் முன்னிலையில் எங்களுக்குள் பேசி சமாதானமாக செல்ல முடிவு எடுக்கப்பட்டது. எனவே நாங்கள் கொடுத்த புகார் மீது மேல் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.

மனிதநேய ஜனநாயக கட்சி நெல்லை மாவட்ட பொறுப்பாளர் ஷேக்முகமது கொடுத்த மனுவில், ராதாபுரம் தாலுகா திருவம்பலபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஆத்தங்கரை பள்ளிவாசல் ரோடு மிகவும் பழுதடைந்து சீரமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் அங்குள்ள சேதம் அடைந்த பாலம் சீரமைக்கப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள், பொது மக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே புதிய உயர்மட்ட பாலம் அமைத்து தர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்ட ஜனநாயக பீடித்தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் கணேசன் கொடுத்த மனுவில், ஏழை பீடித்தொழிலாளர்கள் வீட்டுமனை பட்டா கேட்டு கொடுத்த மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

ஆதித்தமிழர் கட்சி நெல்லை தெற்கு மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் கொடுத்த மனுவில், அருந்ததியர்களின் சமூக, பொருளாதார முன்னேற்றத்துக்கு 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அதனை முறையாக அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

இதே போல் பல்வேறு தரப்பினர் கலெக்டரிடம் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.

சேரன்மாதேவியை பால் வியாபாரி பெருமாள் மனைவி சங்கரம்மாள் மற்றும் உறவினர்கள் கொடுத்த மனுவில், பெருமாளை மர்மநபர்கள் அரிவாளால் வெட்டினார்கள். இதனால் சாதி ரீதியாக மோதல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. எனவே அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

கூட்டத்தில் 29 பேருக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஷில்பா வழங்கினார். தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் 28 பேருக்கு அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் தலா ரூ.2.10 லட்சம் மதிப்பில் வீடு கட்டுவதற்கான ஆணைகளை வழங்கினார். சமையல் உதவியாளராக பணிபுரிந்து இறந்தவரின் வாரிசு ஒருவருக்கு பணி நியமன ஆணை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், சமூக பாதுகாப்பு திட்ட தனி உதவி கலெக்டர் சசிரேகா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com