அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் கடன் வழங்க வேண்டும் - அய்யாக்கண்ணு பேட்டி

அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் கடன் வழங்க வேண்டும் என்று ஈரோட்டில் அய்யாக்கண்ணு கூறினார்.
அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் கடன் வழங்க வேண்டும் - அய்யாக்கண்ணு பேட்டி
Published on

ஈரோடு,

வ.உ.சிதம்பரனார் மனிதநேய பண்பாட்டு பேரவை சார்பில் ஆசிரியர் தின விழா மற்றும் விவசாய கருத்தரங்கம் ஈரோட்டில் நேற்று மாலை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் பி.அய்யாக்கண்ணு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, வ.உ.சிதம்பரனார் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கார்ப்பரேட் நிறுவனத்தை இந்தியாவுக்குள் அனுமதிக்கக்கூடாது. அனைத்து தொழிலும் காப்பாற்றப்பட வேண்டும், வருங்கால சந்ததி காப்பாற்றப்பட வேண்டும், விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைக்க வேண்டும், வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை தமிழகத்திற்கு திருப்பி விடுங்கள் என்று நாங்கள் டெல்லியில் போராடினோம். அந்த போராட்டத்துக்கு பலன் கிடைக்கும் என்று நம்புகிறோம்.

நதிகளை இணைக்கிறோம், விவசாயிகளுக்கு லாபகரமான விலை தருகிறோம் என்று சொன்னார்கள். ஆனால் கொடுக்க மறுக்கிறார்கள். எனவே மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் சென்னையில் நாங்கள் போராட்டம் நடத்த உள்ளோம். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகள் விவசாய பணிகளை தொடங்கி உள்ளனர். எனவே அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்கடன் எளிதில் கிடைக்க அரசு வழிவகை செய்ய வேண்டும்.

தமிழகத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்கின்ற மழைநீர் கேரளா மற்றும் கர்நாடகாவுக்கு செல்கிறது. அதை திருப்பி விட்டாலே தமிழகம் வளம்பொருந்திய மாநிலமாக திகழும். குறிப்பாக மேற்கு மண்டலம் செழுமையாகும். அனைத்து பிரச்சினைகளுக்கும் விவசாயிகளை அழைத்து பேச வேண்டும்.

தேர்தல் வந்தால் நாங்கள் இந்த நாட்டின் முதுகெலும்பு. தேர்தல் முடிந்தால் நாங்கள் இந்த நாட்டின் அடிமைகள். தமிழகத்தில் உயர் மின் கோபுரங்கள் அமைப்பதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அய்யாக்கண்ணு கூறினார்.

பேட்டியின் போது அவருடன் வ.உ.சிதம்பரனார் மனிதநேய பண்பாட்டு பேரவை நிர்வாகிகள் கோ.ராமசந்திரன், அன்புராமஜெயம் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com