

பள்ளிப்பட்டு,
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த வெங்கடராஜூகுப்பம் ஊராட்சியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆழ்துளை கிணறுகள் அமைத்து குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.
தற்போது ஆழ்துளை கிணறுகள் தண்ணீர் இல்லாமல் வற்றிப்போன நிலையில் கிராம மக்கள் கடந்த ஒரு மாத காலமாக விவசாய கிணறுகளில் குடிநீர் தேடி அலைந்து அவதிப்பட்டனர்.
குடிநீர் தட்டுப்பாடு குறித்து பொதுமக்கள் பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர்கள் அதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் நேற்று காலிக்குடங்களுடன் பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் கிடைத்ததும் பள்ளிப்பட்டு போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்களை அவர்கள் அமைதிப்படுத்தினர். மேலும் டிராக்டர்கள் மூலம் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.