

திருப்பூர்,
திருப்பூர் விஜயாபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் இந்த கல்வியாண்டு மொத்தம் 1,271 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் கடந்த 20172018, 20182019 ம் கல்வியாண்டில் சுமார் 550க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பிளஸ்2 முடித்துள்ளனர். அவர்கள் பள்ளிப்படிப்பை முடித்து செல்லும் வரை மடிக்கணினி வழங்கப்படவில்லை.
இந்நிலையில் நேற்று முன்தினம் பள்ளியில் 20192020 கல்வியாண்டில் படித்துக் கொண்டிருக்கும் 298 மாணவ, மாணவிகளில், 244 பேருக்கு மட்டும் மடிக்கணினி வழங்கப்பட்டது. இவர்களில் 54 பேருக்கு மடிக்கணினி வழங்கப்படவில்லை.
இதற்கிடையில் இந்த பள்ளியில் மடிக்கணினி கொடுப்பது குறித்த தகவல் அறிந்த முன்னாள் மாணவர்கள் நேற்று காலை 9.30 மணியளவில் பள்ளிக்கு திரண்டு சென்றனர். பின்னர் பள்ளி தலைமை ஆசிரியரை சந்தித்து எங்களுக்கு மடிக்கணினி வழங்கப்படவில்லை என்றும், மடிக்கணினி வழங்கும் தேதியை தெரிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் தலைமை ஆசிரியர் சரியான பதில் கூறாததால் ஆத்திரமடைந்த மாணவ, மாணவிகள் திருப்பூர்காங்கேயம் சாலையில் விஜயாபுரம் ஒத்தக்கடை நிறுத்தத்தில் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது பற்றிய தகவல் அறிந்ததும் திருப்பூர் தெற்கு தாசில்தார் மகேஸ்வரன், ஊரக போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் தேவராஜன் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஒரு மாதத்திற்குள் மடிக்கணினி வழங்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து மாணவமாணவிகள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதே போல் கொங்கு மெயின் ரோட்டில் உள்ள சின்னச்சாமி அம்மாள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 20172018 மற்றும் 20182019ம் ஆண்டு படித்து முடித்த முன்னாள் மாணவர்களுக்கும் தங்களுக்கு மடிக்கணினி வழங்கக்கோரி கொங்கு மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது பற்றிய தகவல் அறிந்ததும் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் தலைமை ஆசிரியர் துரை ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் மடிக்கணினி வழங்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதன்பின்னர் மாணவர்கள் கலைந்து சென்றனர்.
திருப்பூர் அரிசி கடை வீதி பகுதியில் உள்ள கே.எஸ்.சி. அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் திருப்பூரில் பல்வேறு அரசு பள்ளிகளில் படித்த முன்னாள் மாணவமாணவிகள் மடிக்கணினி கேட்டு பள்ளி முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது பற்றிய தகவல் அறிந்ததும் திருப்பூர் தெற்கு போலீஸ் நிலைய சப்இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் மற்றும் தலைமை ஆசிரியர் ராஜா ஆகியோர் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட மாணவமாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது மடிக்கணினி விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து மாணவமாணவிகள் கலைந்து சென்றனர். இதே போல் புதுராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட முயன்ற போது அவர்களிடம் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலைய சப்இன்ஸ்பெக்டர் ராஜேந்திரபிரசாத் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின்னர் அந்த மாணவிகள் கலைந்து சென்றனர்.
திருப்பூர் இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்2 முடித்த முன்னாள் மாணவர்கள் சுமார் 400க்கும் மேற்பட்டவர்கள் பள்ளி முன்பாக திரண்டனர். அப்போது தங்களுக்கு இலவச மடிக்கணினி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். உடனே சம்பவ இடத்திற்கு திருப்பூர் வீரபாண்டி போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியை சந்தித்து முறையிடுமாறு கூறினர்.
அதன் அடிப்படையில் மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மடிக்கணினி வழங்கக்கோரி திருப்பூரில் பல்வேறு இடங்களில் முன்னாள் மாணவமாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.