சேத்தியாத்தோப்பு அருகே, போலி பட்டா வழங்கிய துணை தாசில்தார் உள்பட 3 பேர் கைது

சேத்தியாத்தோப்பு அருகே போலி பட்டா வழங்கிய துணை தாசில்தார் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேத்தியாத்தோப்பு அருகே, போலி பட்டா வழங்கிய துணை தாசில்தார் உள்பட 3 பேர் கைது
Published on

சேத்தியாத்தோப்பு,

ஸ்ரீமுஷ்ணம் தாசில்தார் புகழேந்தி, கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணனிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

கடந்த 2016-ம் ஆண்டு சேத்தியாத்தோப்பு அருகே பாளையங்கோட்டையில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றிய ராமமூர்த்தி, துணை தாசில்தார் வின்சென்ட் மற்றும் அதே பகுதியை சேர்ந்த நியாசுதீன் ஆகிய 3 பேரும் போலி பட்டா தயார் செய்துள்ளனர். மேலும் அவர்கள் அரசு ஆவணங்களை ஒயிட்னர் வைத்து அழித்தல் போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். அதனால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

மனுவை பெற்றுக் கொண்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி சோழத்தரம் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் இருதயராஜ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், நியாசுதீன் என்பவர் கிராம நிர்வாக அதிகாரி ராமமூர்த்தி, துணை தாசில்தார் வின்சென்ட் ஆகியோருக்கு ரூ.1 லட்சம் கொடுத்து போலியான பட்டா தயார் செய்தது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிராம நிர்வாக அதிகாரி ராமமூர்த்தி, நியாசுதீனை தொடர்பு கொண்டு போலி பட்டா வழங்கியதற்காக மேலும் ரூ.10 லட்சம் லஞ்சமாக தர வேண்டும் என்று கூறினார். அதற்கு நியாசுதீன் பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்து விட்டார். அதனால் ராமமூர்த்தி, நியாசுதீனுக்கு கூட்டு பட்டா வழங்கப்பட்டதாக அரசு ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்ததை ஒயிட்னர் மூலம் அழித்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமமூர்த்தி, வின்சென்ட், நியாசுதீன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com