வால்பாறையில் தடுப்பூசி பற்றாக்குறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதம்

வால்பாறையில் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வால்பாறையில் தடுப்பூசி பற்றாக்குறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதம்
Published on

வால்பாறை

வால்பாறையில் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தடுப்பூசி பற்றாக்குறை

மலைப்பிரதேசமான வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதிகளில் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக இங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு அரசு மேல்நிலைப்பள்ளி, முடீஸ், சோலையார் நகரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அந்தந்த எஸ்டேட் பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பூசிபோடப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

இறுதியில் 50-க்கும் மேற்பட்டவர்கள் காத்து நிற்கும்போது பற்றாக்குறை காரணமாக தடுப்பூசி போடுவது நிறுத்தப்பட்டது.

அதிகாரிகளிடம் வாக்குவாதம்

உடனே அங்கு காத்திருந்த பொதுமக்கள் ஏன் தடுப்பூசி போடவில்லை என்று சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டனர்.

அதற்கு அவர்கள், குறைந்தளவில் மட்டுமே தடுப்பூசி வந்ததாகவும், அது தீர்ந்து விட்ட தால் வந்த பின்னர் போடப்படும் என்றும் தெரிவித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அதிகாரிகளிடம் கடுமையான வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து உயர் அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

பின்னர் ஆதார் அட்டை நகல்களை கொடுத்துவிட்டு செல்லுங்கள், அடுத்த முறை தடுப்பூசி போடும்போது உங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர்.

இதையடுத்து அவர்கள் ஆதார் அட்டை நகல்களை கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றனர்.

டோக்கன் வழங்க வேண்டும்

இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, வால்பாறையில் 10 ஆயிரம் பேரே உள்ளனர். அதில் பலர் தடுப்பூசி போட்டுவிட்டனர்.

தடுப்பூசி போடும்போது, வீடுவீடாக ஆய்வு செய்து, தடுப்பூசி போடாதவர் களுக்கு டோக்கன் கொடுத்து, ஆங்காங்கே முகாம்களை நடத்தினால் சிரமம் இருக்காது. அதை செய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும் என்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com