ஈரோட்டில் வீதி, வீதியாக காய்கறி –மளிகை பொருட்களை வினியோகம் செய்ய வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

ஈரோட்டில் வீதி, வீதியாக காய்கறி மற்றும் மளிகை பொருட்களை வினியோகம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோட்டில் வீதி, வீதியாக காய்கறி –மளிகை பொருட்களை வினியோகம் செய்ய வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
Published on

ஈரோடு,

கொரோனா பாதிப்பு பொதுமக்களை முற்றிலும் வீடுகளில் முடக்கி உள்ளது. எதிர்பாராத வகையில் திடீர் என்று ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் பொதுமக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைக்கான பொருட்களை வாங்கவே மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். பொதுமக்களுக்கு தேவையான பொருட்கள் விற்பனை செய்யும் மளிகை, காய்கறி, பால், மருந்து உள்ளிட்டவை விற்பனை செய்யும் கடைகள் திறந்து இருக்கும் என்று அரசு அறிவித்து உள்ளது.

ஆனால் இந்த கடைகள் இருக்கும் இடத்தை தேடி வரும் பொதுமக்கள் வழியிலேயே போலீசாரால் தடுத்து நிறுத்தப்படும் நிலை உள்ளது. உயர் பதவிகள், தனியார் நிறுவனங்களில் உயரிய பணிகளில் இருப்பவர்கள் கூட பல நேரங்களில் சாலையில் அவமானப்படும் சூழல் ஏற்படுகிறது. இதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களுக்கு தேவையான காய்கறி மற்றும் மளிகை பொருட்களை வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து உள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:

கொரோனா தொற்று நமக்கு அடுத்து இருப்பவர்களிடம் இருந்து நமக்கு தொற்றிவிடக்கூடாது. நம்மை அறியாமல் நம்மிடம் நோய்த்தொற்று இருந்தால் அது மற்றவர்களிடம் பரவி விடக்கூடாது என்பதற்காக தனிமைப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

கொரோனாவை தடுக்க தொடர்ந்து கால நேரம் பார்க்காமல் பணியாற்றும் அதிகாரிகள், அரசு மற்றும் போலீஸ்துறை பணியாளர்கள் என்று அனைவரையும் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நடமாடும் வாகனங்களை வீதி வாரியாக கொண்டு சென்று மக்களுக்கு தேவையானவற்றை விற்பனை செய்ய வேண்டும். இது சாத்தியமான நடைமுறைதான்.

ஆனால், ஒரு வாகனத்தை வீதிகளுக்கு கொண்டு வந்து விட்டால் வரிசைப்படி அவர்களுக்கு என்ன பொருள் எந்த அளவுக்கு தேவையோ அதை மட்டும் தங்கள் பொருளாதார நிலைக்கு ஏற்ப வாங்கிக்கொள்வார்கள். இது தேவையற்ற சமூக பதற்றத்தை கண்டிப்பாக தவிர்க்கும். எனவே அரசும், அதிகாரிகளும் உடனடி நடவடிக்கை எடுத்து வீடுகளுக்கு காய்கறி, மளிகைப்பொருட்கள் வினியோகம் செய்ய ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com