திருப்பூர் மாநகராட்சி 41-வது வார்டில் அடிப்படை வசதிகோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாநகராட்சி 41-வது வார்டில் அடிப்படை வசதிகோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருப்பூர் மாநகராட்சி 41-வது வார்டில் அடிப்படை வசதிகோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
Published on

நல்லூர்,

திருப்பூர் மாநகராட்சி, 3-வது மண்டலத்திற்குட்பட்ட 41-வது வார்டு, பகுதியில் அடிப்படைவசதிகள் கோரி இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி 3-வது மண்டலக்குழு சார்பில் பொதுமக்கள் நல்லூர் மண்டல அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.

திருப்பூர் மாநகராட்சி, 3-வது மண்டலத்திற்குட்பட்ட 41-வது வார்டு, செரங்காடு தோட்டம், பி,ஏ.பி.நகர் பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி, 3-வது மண்டலக்குழு சார்பில் முன்னாள் கவுன்சிலர் காட்டே சி.ராமசாமி தலைமையில் நேற்று நல்லூர் 3-வது மண்டல அலுவலக நுழைவாயில் முன் காலிக்குடங்களுடன் ஆர்ப்பாட்டம் செய்து மாநகராட்சி அதிகாரியிடம் கோரிக்கை மனு அளித்தனர். ஏ.ஐ.டி.யு.சி.,பொதுச்செயலாளர் சேகர், மண்டல செயலாளர் செந்திகுமார், மாவட்ட குழு ஜெகநாதன் முன்னிலை வகித்தனர்.

அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டிருந்ததாவது :-

எங்கள் பகுதியில் உள்ள வீட்டு குடிநீர் இணைப்பு உள்ளவர்களுக்கு வாரம் இருமுறை சீரான குடிநீர் வினியோகம் செய்யவேண்டும், வீதிகளில் தேங்கிக்கிடக்கும் குப்பைகளால் பல்வேறு தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் உள்ள அடைப்புகளை வாரம் இருமுறை சுத்தம் செய்து கழிவுநீர் தேங்காமல் தடுத்து கொசுமருந்து அடிக்கவேண்டும். அப்பகுதியில் குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட போது தார்ச்சாலை சேதமடைந்து குண்டும்,குழியுமாக உள்ளது. இதனால் அவ்வழியாக நாள் தோறும் விபத்துகள் நடைபெற்று வருகிறது. எனவே புதிய தார்ச்சாலை அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் சாலை, சாக்கடை வசதிகள் இல்லாத பகுதிகளுக்கு புதிய சாலை, சாக்கடை வசதி செய்து தர வேண்டும். தெரு விளக்குகள் இல்லாத பகுதிகளில் இருள் சூழ்ந்துள்ளதால் திருட்டு, வழிப்பறி நடைபெற வாய்ப்புள்ளது. எனவே தெருவிளக்கு இல்லாத பகுதிகளில் தெரு விளக்கு அமைத்து குற்ற சம்பவங்ககள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த வேண்டும். இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com