பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள கீழக்கழனி ஏரியில் மதகுகள், கரைகள் சேதம்

பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள கீழக்கழனி ஏரியில் சேதமடைந்துள்ள மதகுகள், கரைகளை வடகிழக்கு பருவ மழைக்குள் சீரமைக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள கீழக்கழனி ஏரியில் மதகுகள், கரைகள் சேதம்
Published on

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியம், ஒரத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட கீழக்கழனி கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி சுமார் 200 ஏக்கர் பரப்பளவு கொண்டது.

இந்த ஏரி தண்ணீரை பயன்படுத்தி சுமார் 150 ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த 2015-ம் ஆண்டு பெய்த அடைமழையின்போது இந்த ஏரி முழுமையாக நிரம்பியது.

அப்போது ஏரியின் ஒரு பகுதியில் உள்ள கரை உடைந்து தண்ணீர் ஊருக்குள் புகுந்து வீணானது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

அப்போது உடைந்த கரையை தற்காலிகமாக மணல் மூட்டைகளை அடுக்கி சரி செய்தனர். ஆனால் அதன்பிறகு இதுவரையிலும் சேதம் அடைந்த ஏரிக்கரையை பொதுப்பணித்துறை அதிகாரிகள் நிரந்தரமாக சீரமைக்கவில்லை.

ஏரியில் உள்ள மதகுகளும் மிகவும் பழுடைந்து காணப்படுகிறது. மதகு அருகே ஏரிக்கரை மீது புதைக்கப்பட்டுள்ள கருங்கற்கள் பெயர்ந்து கரையில் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டு மிகமோசமான நிலையில் காணப்படுகிறது. இதேபோல் ஏரியை சுற்றியுள்ள கரைகளிலும் ஆங்காங்கே மண் அரிப்பு ஏற்பட்டு, ஏரியில் தண்ணீர் நிரம்பினால் கரை உடையும் ஆபத்தான நிலையில் உள்ளது.

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்குள் கீழக்கழனி ஏரியின் கரைகளை பலப்படுத்தி, சேதடைந்த மதகுகளை சீரமைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லை என்றால் அடைமழை பெய்யும்போது ஏரி முழுமையாக நிரம்பி ஏரியின் பல பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ள கரைகள் உடைந்து, ஏரியில் உள்ள அனைத்து நீரும் ஊருக்குள் வெள்ளமாக புகுந்துவிடும் ஆபத்து உள்ளது. இதனால் இந்த ஏரியை நம்பி உள்ள விவசாயிகளும், இப்பகுதியில் உள்ள பொதுமக்களும் மிகவும் பாதிக்கப்படுவார்கள். இது குறித்து கீழக்கழனி விவசாயிகள் கூறியதாவது:-

கீழக்கழனி பகுதியில் உள்ள இந்த பெரிய ஏரி, விவசாயம் மற்றும் பொதுமக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. தற்போது இந்த ஏரியின் கரைகள், மதகுகள், கலங்கள் பகுதி என அனைத்தும் சேதம் அடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு பலமுறை மனுக்கள் அளித்தும், 3 ஆண்டுகளுக்கு முன்பு சேதம் அடைந்த கரையைகூட சரிசெய்யவில்லை.

சேதமடைந்த இந்த ஏரியை அதிகாரிகள் இதுவரை நேரில் வந்து ஆய்வு செய்யவில்லை வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்குள் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இந்த ஏரியை நேரில் பார்வையிட்டு பழுதடைந்த மதகுகள், கலங்கல், மண் அரிப்பு ஏற்பட்டுள்ள ஏரிக்கரைகளை சீரமைத்து கரைகளை பலப்படுத்தவேண்டும்.

இந்த பகுதியில் விவசாயம் செழிப்பதற்கும், நிலத்தடி நீர் பெருகுவதற்கும் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com