முக கவசம் அணிவதில் பொதுமக்கள் அலட்சியம் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் கவலை

அதிகாரிகளை பார்த்தால் மட்டுமே முககவசம் அணிகின்றனர் என்றும், தற்பொது பொதுமக்களிடையே முககவசம் பயன்படுத்தும் முறை குறைந்துள்ளது எனவும் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கவலை தெரிவித்துள்ளார்.
முக கவசம் அணிவதில் பொதுமக்கள் அலட்சியம் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் கவலை
Published on

சென்னை,

சென்னை தண்டையார்பேட்டை மண்டலத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமினை சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்து, பொது மக்களுக்கு முககவசங்களை வழங்கினார். இதையடுத்து நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணி முழுவீச்சில் நடைபெறுகிற காரணத்தால், எத்தனை பேருக்கு பரிசோதனை செய்கிறோமோ அதில் 10 விழுக்காடு மட்டுமே தொற்று உறுதி செய்யப்படுகிறது. பெரும்பாலான மாவட்டங்களில் 6 விழுக்காடுக்கும் கீழ் குறைந்துள்ளது.

அந்தவகையில் சென்னையின் சில மண்டலங்கள் மற்றும் கோவை, சேலம், தஞ்சாவூர் போன்ற பகுதிகளில் தனி கவனம் செலுத்தி கண்காணிக்கப்படுகிறது. கடலூரில் மேற்கொள்ளப்பட்ட தீவிர நடவடிக்கையினால் தொற்று சற்று குறைந்து வருகிறது.

முககவசம் பயன்படுத்தும் முறை குறைந்தது

அனைத்து மாவட்டங்களிலும் காய்ச்சல் முகாம்கள் நடத்தி வரும் சூழ்நிலையில், பொது மக்களிடையே கொரோனா விழிப்புணர்வு குறித்து தெரு பிரசாரங்களும் மேற்கொள்ளப்படுகிறது. பொது மக்களிடையே நோய் தொற்றுக்கு முககவசம் பயன்படுத்தும் முறை தற்போது குறைந்துள்ளது.

இதனை அதிகப்படுத்துவதற்காக வீடு, வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. தொற்று அறிகுறி வந்தவுடன் உடனடியாக மருத்துவமனைக்கு வந்துவிட்டால், அவர் களை முழுமையாக குணப்படுத்த முடியும் என்பது டாக்டர் களின் வேண்டுகோள்.

அந்தவகையில் இறப்பு விகிதம் 1.2 ஆக குறைந்துள்ளது. அதனை ஒரு விகிதத்துக்கும் கீழ் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். பொதுமக்கள் முககவசம் அணிதல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றாத காரணத்தால் தான் தொற்று பாதிப்பு அதிகரிக்கிறது.

தன்னைத்தானே ஏமாற்றுகின்றனர்

தமிழகத்துக்கு எடுத்துக்காட்டாக வடசென்னை திகழ்கிறது. அந்த பகுதியில் உள்ள திடீர் நகர், அன்னை சத்யா நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் பொதுமக்கள் முககவசத்தை முழுமையாக அணிகின்றனர்.

மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைந்துள்ள நிலையில், பொதுமக்கள் மத்தியில் இது சாதாரண காய்ச்சல், பாதிப்பு ஏற்படுத்தாது என்ற அலட்சியம் ஏற்பட்டுள்ளது. ஏறத்தாழ சுமார் 30 முதல் 35 விழுக்காடு மக்கள் முககவசம் அணிவது இல்லை.

மேலும் முககவசம் அணிந்தாலும், அதனை மூக்கிற்கு கீழ் வைப்பதும், கழுத்துக்கு கீழ் தொங்கவிடுவதும், சட்டை பைகளிலும் வைப்பதும் என, அதிகாரிகளை பார்த்தால் மட்டுமே முறையாக அணிந்து தங்களை தாங்களே ஏமாற்றி வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com