

தேனி :
தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட காஞ்சிமரத்துறை பகுதியில் 70-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இந்த பகுதியில் பொது கழிப்பிட வசதி, தெருவிளக்குகள், ரேஷன் கடை, பள்ளி வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என கூறப்படுகிறது.
முல்லைச்சாரல் விவசாயிகள் சங்க தலைவர் கொடியரசன், செயலாளர் ஜெயபால் ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று நகராட்சி அலுவலகத்திற்கு சென்றனர்.
அங்கு குறிப்பிட்ட சிலர் மட்டும் சென்று ஆணையாளர் ஆறுமுகத்திடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.
அப்போது ஆணையாளர் கூறுகையில், காஞ்சிமரத்துறை பகுதி மக்களுக்கும் புதிய குடிநீர் குழாய்கள் அமைத்து தரப்படும்.
நகராட்சி எல்லைப்பகுதிகளில் கூடுதல் தெருவிளக்கு அமைக்கப்படும். பள்ளிக்கூடம் மற்றும் ரேஷன் கடை திறப்பது குறித்து அந்தந்த துறை அதிகாரிகளுக்கு பரிந்துரைக்கப்படும் என்றார்.
அவருடன் நகராட்சி பொறியாளர் ராமசுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர் ரவிச்சந்திரன், கூடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜேம்ஸ் ஜெயராஜ் ஆகியோர் இருந்தனர்.